நெஞ்சு பொறுக்குதிலையே…
அரசுப் பணம் சட்ட ரீதியாக, முறையாகக் கணக்கு எழுதி ஒரு சிலரால் (பலரால்?) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆட்சியாளர்கள் பலமுறை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். முறைகேடாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத்தரகர்களால் அரசுப் பணம் கபளீகரப்படுத்தப்படுவது ஒருபுறம் இருக்க, சமூகசேவை செய்கிறோம் என்கிற பெயரில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
அரசு நேரடியாகச் செயல்படுத்தும் திட்டங்களில் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்பதால்தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் பல திட்டங்களை நிறைவேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்போது, இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளும் கேள்விக்குரியவையாக இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
2001ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 15 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்றைய நிலையில் குறைந்தது 30 லட்சம் தொண்டு நிறுவனங்கள் காணப்பட்டால் வியப்பில்லை. வேடிக்கை என்னவென்றால், இவற்றில் 90 சதவீதம் நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டுபேர்தான் வேலை செய்கிறார்கள்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் அரசின் உள்துறை மற்றும் சமூக நலத்துறையில் பதிவு செய்திருப்பவர்களில் பலரும் கிராமப்புறத்தில் சேவை செய்வதாகத்தான் தகவல் தெரிவிக்கிறார்கள். வருடாவருடம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்ட கணக்கைச் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், ஏதாவது வேலை நடந்திருக்கிறதா என்று பார்த்தால், ஒரு சில புகைப்படங்களும் அரசை திருப்திப்படுத்த சில நிகழ்ச்சிகளும்தான் மிச்சம். இவர்களது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்காக லட்சக்கணக்கில் மானியம் அரசால் வழங்கப்படுகிறது. இது போதாதென்று, வெளிநாடுகளிலிருந்து உதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் கணக்கே தனி.
அரசியல் தலைவர்கள் பலரும், மனைவி, மகள், மருமகள் என்று உறவினர்களின் பெயரில் இது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்து, மத்திய அரசின் உதவித்தொகையை லட்சக்கணக்கில் கபளீகரம் செய்வது சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் பல முன்னாள் மற்றும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.
அரசு அதிகாரிகள் மூலம் சமுதாய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது அதில் ஊழல் தலைகாட்டும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான் 1953-ல் மத்திய சமூகநல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம், இந்தியா முழுவதும் பொதுநலத் தொண்டு செய்யும் எண்ணமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்து சமூக வளர்ச்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது என்று அன்றைய ஜவாஹர்லால் நேரு அமைச்சரவை முடிவெடுத்தது. சமூகநல வாரியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.
மத்திய சமூகநலத் துறையின் (Central Social Welfare Board்) இணையதளத்தில் ( http://www.wcd.nic.in) அரசின் மானியத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக சுமார் 3,500 தன்னார்வ சேவை நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் உறவினர்களின் பெயரில் நடத்தும் தன்னார்வ சேவை நிறுவனங்களும் அடக்கம்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் தமிழகத்தில் மட்டும் சுமார் 304 போலித் தன்னார்வ சேவை நிறுவனங்கள் இருந்து வந்திருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் செய்தி. தமிழகம் மட்டுமல்ல, வெறும் 479 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள புதுச்சேரியில் சுமார் 140 தன்னார்வ சேவை நிறுவனங்கள் போலியாக இயங்கி வந்திருக்கின்றன. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் “தன்னார்வ முறையில்’ களவாடப்படுகிறது என்பதை நினைத்தால் திகைப்போ திகைப்பு!
இந்த நிலைமைக்குக் காரணம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததுதான். இதுபோன்ற போலிகளை அடையாளம் கண்டு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கடமை படித்தவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உண்டு.
“”நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…!”