Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Erode’ Category

Tamil Traditions & Culture Festival – Folk Arts Celebration in Erode: Sriram Chits

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மரபு: காகங்கள் சொல்லும் காலம்!

தமிழ்மகன்

ஈரோடு மாவட்டத்தில் பிப்.22 முதல் 24 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்ற கொங்கு மண்டல மரபுக் கலைவிழா நகரையே ஒரு கலக்கு கலக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

விழாவில் மரபு சார்ந்த இந்த நிகழ்த்துக் கலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன், சேலம் காவல்துறை துணை ஆணையர் சின்னசாமி, டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இராமராஜ் எனப் பல்வேறு அதிகார மையங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குரல் கொடுத்தது வியப்பளிக்கும் விஷயமாக இருந்தது. மரபுக்கலைகள் குறித்து ஆய்வு நோக்கோடு அவர்கள் பேசியதும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.

2002-ல் ஈரோடு மொடக் குறிச்சியில் இந்த விழாவுக்கான வித்திட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி. “”எங்கள் குடும்பத்திலேயே பலர் “பொன்னர் சங்கர்’ கூத்துக் கலைஞர்களாக இருந்தார்கள். அதுவே எனக்கு இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கூடவே கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய “நூற்றாண்டுத் தனிமை’யைப் போன்ற மரபின் பின்னணியை ஒட்டி ஒரு நாவல் எழுத உத்தேசித்து பல கூத்துக் கலைஞர்களைச் சந்தித்தேன். இதுதான் மரபுக் கலைஞர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்கான காரணங்கள்.

மொடக்குறிச்சியில் நடைபெற்ற விழாவை அறிந்து எழுத்தாளர் அம்பை வந்து சந்தித்தார். அப்போது மரபுக் கலைஞர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் தயாரித்தோம். இந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பகம், ஸ்ரீராம் சிட்ஸ் இணைந்து இந்த மரபுக் கலைவிழாவை ஏற்பாடு செய்தது” என்று விழாவுக்கான முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் தேவிபாரதி. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கலைவிழாவின் சுவாரஸ்யத் துளிகள்…

தப்பாட்டம், சலங்கையாட்டம் என ஈரோடு வ.உ.சி பூங்காவில் இருந்து மரபுக் கலைஞர்களின் பேரணி ஆரம்பித்தது. விழாவில் பங்கு பெற்றகலைஞர்களிடமும் சிறப்பு விருந்தினர்களிடமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஈடுபாட்டுடன் பேசியதிலிருந்தே அவருக்குப் பண்பாட்டுக் கலைகள் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் நாள் இரவு கரூர் கே.ஆர். அம்பிகா குழுவினரின் “அரிச்சந்திரா’ நாடகமும் இரண்டாம் நாள் இரவில் கரூர் ஆர்.டி.எஸ். நெடுமாறன் குழுவினரின் “சித்திரவள்ளி’ இசை நாடகமும் “பொன்னர் சங்கர்’ உடுக்கடிக் கூத்தும் நடைபெற்றது. மூன்றாம் நாள் இரவு கூத்தம்பட்டித் திருமலைராஜன்- பவானி அர்ஜுனனின் “மதுரைவீரன்’ இசைக் கூத்து நடைபெற்றது.

காலை நேரங்களில் அமர்வுகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தேவி பாரதி, செல்வராஜ் போன்றோரின் கிராமப்புறக் கதைகளில் சோம்பேறிகளுக்கான அறிவுரை, சித்தி கொடுமை, சமயோசித புத்தியால் சமாளித்தல் போன்ற பொதுத்தன்மையைக் கவனிக்க முடிந்தது. அதையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் இன்றைய குழந்தைகள் மெகா சீரியல்களிலும் சினிமா பாட்டு நிகழ்ச்சிகளிலும் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவலமும் நினைவுக்கு வந்தது.

“”இத்தகைய கிராமிய கதைகள் மூலமாக அந் நாளைய கிராமியச் சூழலையும் அறியமுடிகிறது. காக்கைகள் தீய குணம் பெற்றவையாகச் சித்திரிக்கப்படுவது பிற்காலக் கதைகளில்தான். நன்னூலில் ஏழாம் வேற்றுமைக்கு உதாரணமாக “கருப்பின் கண் மிக்குளது அழகு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, காக்கைகள் அறிவாளிகளாகவும் அழகானவையாகவும் சித்திரிக்கப்பட்ட காலகட்டம் தொல்காப்பிய காலகட்டம் என்று தெரிகிறது. கருப்பு நிறம் அறியாமையின் நிறம் என்று சிந்திக்கத் தொடங்கியது பிற்காலங்களில்தான்…” என்ற பெருமாள்முருகனின் கருத்து சிந்திக்கத் தகுந்தது. காக்கைகள் கதைகள் மூலம் காலத்தை அறியமுடியும் என்பது ஆச்சர்யம்தான்.

புலவர் செ.இராசுவின் கொடுமணல் அகழ்வாய்வுகள் பற்றிய பேச்சு வரலாற்றுக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.

எழுத்தாளர்கள் சுகுமாரன், யுவன் சந்திரசேகர், குவளைக்கண்ணன், அய்யப்ப மாதவன், கடற்கரய், ரெங்கையா முருகன் போன்ற பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

மரபுக்கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி புறப்பட்டோம்.

Posted in Arts, Culture, Erode, Folk, Folk Arts, Folklore, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Literature, Research, Sangam, Tradition | Leave a Comment »

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Madurai Collector T Udayachandran transfer & impact on Paappapatti, Keeripatti

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

மதுரை ஆட்சியர் மாற்றம் எதிரொலி: கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை, பிப். 21: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் பணியிட மாற்றம், மாவட்ட அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பத்து ஆண்டுகளாக ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி அவர் சாதனை படைத்தார்.

தற்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவி ஏற்றபின் கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.

இந் நிலையில் அவரது பணி மாற்றம் அந்த கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மதுரை ஆட்சியர் மாற்றம்; தொடரும் சிக்கல்: விடுப்பில் சென்றார் புதிய ஆட்சியர்

மதுரை, மார்ச் 1: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் மாற்றத்தை அடுத்து புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி. கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாமணி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த த.உதயச்சந்திரன் கடந்த 20-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.

அவரது மாறுதலைக் கண்டித்து பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.மோகன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், மாறுதல் வெளியான மறுதினமே புதிய ஆட்சியராக டி.கார்த்திகேயன் பதவியேற்றார். பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு சமரசம் செய்யப்பட்டது.

இக் கிராமங்களுக்கு புதிய ஆட்சியர் நேரில் சென்று கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, 5 நாள் விடுப்பில் சென்ற அவர், தற்போது தமது விடுப்புக் காலத்தை மேலும் 15 நாள் நீட்டிப்பு செய்துள்ளார். இதை அரசு ஏற்றுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நீடிப்பாரா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகத்தில் எழுந்துள்ளது.

Posted in B Mohan, BJP, Civic, Collector, Communist, CPI(M), D Karithikeyan, D Karthigeyan, D Karthikeyan, Dalit, District Collector, DMK, Erode, Government, Karithigeyan, Keeripatti, Leaders, Local Body, Madurai, Madurai Collector, Marxist, MDMK, Municipality, Naattarmanagalam, Nattarmanagalam, Officials, Paappapatti, Pappapatti, Politics, Rajamani, T Karithikeyan, T Karthikeyan, T Udayachandran, VaiKo | Leave a Comment »

Tiruppur, Coimbatore Electricity shutdowns – Power cuts & Textile Industry’s impact

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பகுதியில்,

  • வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
  • தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
  • மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
  • ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.

உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.

பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:

உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.

நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.

மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

  • பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
  • இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
  • இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
  • நகரில்
    • நொச்சிபாளையம்,
    • மங்கலம் சாலை,
    • அருள்புரம்,
    • மண்ணரை,
    • திருவள்ளுவர் நகர்,
    • மாதேஸ்வரா நகர்,
    • கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.

கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

பெங்களூர்,பிப்.23-

கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.

மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.

இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.

============================================================

செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு

  • வடசென்னை,
  • எண்ணூர்,
  • மேட்டூர் மற்றும்
  • தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.

மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »