மண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன?
ப. இசக்கி
திருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.
சுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.
“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.
நெல்லையில் ஏன் மாநாடு?
வட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.
திருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன?.
திமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
முதல் வெற்றி:
மாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
திருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.
பொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.
இந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
————————————————————————————–
குமுதம் ரிப்போர்ட்டர்
தேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்
(நெல்லை அதிரடி)
– அ. துரைசாமி
தன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.
நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.
மாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.
இப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்?
தென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.
வட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி?’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
விழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.
அவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது!’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.
பின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.
மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.
அதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.
‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.
அன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.
மாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.
‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
– அ. துரைசாமி