முக்கியத்துவங்கள் மாற வேண்டும்
க.ப. அறவாணன்
தமிழில் வெளிவரும் பத்திரிகைகளையும் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களையும் ஆங்காங்கே கல்லூரி இளைஞர்களிடையே எடுக்கப்பெற்ற கருத்துக் கணிப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது நம் இளைஞர்களின் முன்னுரிமைகள் பின்வருமாறு உள்ளன.
1. திரைப்படம் (பெரியதிரை, சின்னத்திரை)
2. விளையாட்டு
3. அரசியல்.
இந்நிலை மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கத்தக்கது. இம் மூன்றும் அறிவுபூர்வமானவை என்பதைவிட, உணர்வுபூர்வமானவை என்பது தெளிவு.
உணர்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பெறும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். மோகத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் முடிவுகள், முடிவு செய்பவரை வீழ்த்தும்.
நம் நாட்டின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் இளைஞர்களின் கனவிலும் நினைவிலும்
- திரைப்படமும்
- விளையாட்டும்
- அரசியலும் முன்னுரிமை பெற்று அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன.
முன்னுரிமை பெற வேண்டிய
- கல்வி,
- குடும்பம்,
- சேவை மனப்பான்மை ஆகியன பின்னுக்குப் போயிருப்பது மிகக் கவலை தரத்தக்க நிலவரம். இந்நிலை இளைஞர்களிடையே உருவாவதற்கு அவர்கள் மட்டும் காரணர் அல்லர். அவர்களை வழிநடத்தத் தவறிய அனைத்துத் தரப்பினரும் பெரும் காரணர்.
குறிப்பாகக் கடந்த அறுபது ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் உணர்வை மையப்படுத்தி நடைபெற்றுவரும் அரசியல் சூதாட்டங்களும் கல்வி நிறுவனங்களை வியாபார நிறுவனங்களாக நடத்தி வருவோரின் சேவை நோக்கமின்மையும் இளைஞர்களைச் சரியான குடிமக்களாக உருவாக்கத் தவறிய ஆசிரியர்களும் சுட்டிக்காட்டத் தக்கவர்கள் ஆவார்கள்.
தொண்டாகச் செய்யப்பட வேண்டியவை தொழிலாகக் கருதப்பட்டமையால், கவனமின்மையும் சேவை மனப்பான்மைக் குறைவும் இளைய தலைமுறையைத் திசைமாறச் செய்துவிட்டன. இதயத்தைவிட, வயிறு பெரிது என்றும் வயிற்றை விட, வசதி பெரிது என்றும் பிழையான மனப்போக்கில் நம் இளைஞர்கள் முக்கியத்துவங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். இது தவறு என்பது வெளிப்படை.
திரை, விளையாட்டு, அரசியல் என்ற மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவோரின் நோக்கம் பொதுநலம் அன்று, சமுதாய நோக்கம் அன்று, நாட்டு நலமும் அன்று. தம் வருவாய், வசதி, வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கங்கள்.
எனவேதான் நம் முன்னோரின் முன்னுரிமைகளும் முக்கியத்துவங்களும் வேறு வரிசையில் இருந்தன.
அக்பருக்கு அருகில் இருந்த பீர்பால் மிகச் சிறந்த பண்பும் அறிவும் உடைய அமைச்சராவார். மௌரிய அரசரை வெற்றிகொள்ள வைத்த சாணக்கியர், மிகச்சிறந்த ஞானதந்திரி ஆவார்.
நம் பழைய காலத் தமிழ் மன்னர்களின் வரலாற்றைப் பாருங்கள். பாரி மன்னனுக்கு அருகிலிருந்தவர் கபிலர் என்ற தன்னலம் மறுத்த புலவர்! அதியமானுக்கு அருகில் இருந்தவர் அவ்வை என்ற தலைசிறந்த கவிஞர்! பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அருகிலிருந்தவர் மாங்குடி மருதன் என்ற பெரும்புலவர்! சேரன் செங்குட்டுவனுக்கு அருகிலிருந்தவர் சீத்தலைச் சாத்தனார் என்ற சான்றோர்! அரசர்களுடன் அறிவு நலம் வாய்ந்த பண்பாளரும் புலமை வாய்ந்தவரும் நெருங்கியிருந்தனர்.
அரசர்கள் தவறு செய்ய நேரும்போது தட்டிக்கேட்பதும் இடித்துரைப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தன.
அரசு ஆட்சி முடிவுக்கு வந்து, குடியரசு ஆட்சி அறிமுகம் ஆனவுடன் நல்லவர்கள் ஒதுங்கத் தொடங்கினார்கள்.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபொழுது, ஆளும்பொறுப்பு எதுவும் வேண்டா என்று ஒதுங்கியிருந்த மகாத்மா காந்தி, இங்கே சுட்டத்தக்கவர். அவரைப்போலவே, ஆரவார அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி, பூதானத் தொண்டாற்றிய வினோபா பாவே நினைத்துப் பார்க்க வேண்டியவர். சோஷலிச வாதியாக இருந்த ஜயப்பிரகாச நாராயணன் தகுதி பல இருந்தும் பொறுப்புகள் எதுவும் வேண்டா என்று விலகியிருந்தார்.
இவ்வாறு பதவிகளைவிட்டு விலகி, பொதுச்சேவையையே முன்னிறுத்தி வாழ்ந்த இவர்களால் இந்தியாவில் அழிக்க முடியாத சாதனைகள் நிகழ்ந்தன.
காலப்போக்கில் நல்லோர் ஒதுங்குவதைப் பயன்கொண்டு, வாக்கு வேட்டையை மையப்படுத்திக் குறிப்பாகத் தமிழ்நாட்டில்
- திரைத்துறையும் அதன்பின்பு
- சாதிய வாதமும் முன்னிறுத்தப்பட்டன.
இன்று, இந்த இரண்டுமே தமிழ்நாட்டு அரசியலையும் நிகழ்காலத்தையும் தீர்மானிக்கும் சக்திகள் ஆகிவிட்டன.
எந்த உணர்ச்சி மோகத்திலிருந்தும் சாதி வெறியிலிருந்தும் விடுபடவும் விலகவும் விரும்பினோமோ அதே சிறைகளில் நாம் சிக்கிக் கொண்டோம்.
இதிலிருந்து மீளுவதுபற்றி மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். இவற்றால் வசதியும் வாழ்வும் பெற்றவர்கள், இளைஞர்கள் விழித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதனால்தான் உணர்ச்சிப் போதையை ஊட்டி, அதிலேயே மயக்குறுத்தும் சின்னத்திரை, பெரியதிரை ஆசையையும் விளையாட்டு மோகத்தையும் அரசியல் காழ்ப்பையும் திட்டமிட்டு விதைக்கின்றனர்; வளர்க்கின்றனர்.
இத்தகு நிகழ்வுகள் சுயநலவாதிகளால் வளர்க்கப்படும்போது எச்சரிக்கையாக இளைஞர்கள் இருந்தமையையும் விழிப்புள்ள பத்திரிகையாளர்களும் சான்றோர்களும் கவனமாகக் கருத்துடன் இருந்தமையையும் வெளிநாட்டு வரலாறுகள் நமக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அப் பாடங்களை நாமும் நம் இளைஞர்களும் படித்துக் கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும்.
நாம் கொடுத்துவரும் முக்கியத்துவங்களின் வரிசை மாற வேண்டும். அவ்வரிசை, பின்வருமாறு அமையலாம். முதலாவது பொதுச்சேவை, இரண்டாவதுதான், தன் குடும்பம் முதலான இன்னபிற என மையப்படுத்தி நம்மை உணர்ச்சிப்போதையில் அழுத்திவரும் பொழுதுபோக்குச் சாதனங்களைப் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும்.
ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானியப் பயணங்களின்பொழுது நான் அந்நாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டைக் கவனித்திருக்கிறேன்.
விளையாடும்பொழுது முழு ஈடுபாட்டுடன் விளையாடு, வேலைசெய்யும்போது முழு ஈடுபாட்டுடன் வேலை செய் என்பதே அவர்களிடையே எழுதப்படாத சட்டமாக முழு மனதுடன் பின்பற்றப்படுகிறது. அவர்களது அபார வளர்ச்சிக்கு இந்த மனப்போக்கே காரணம்.
அவர்கள் இல்லங்களுக்குச் செல்லும்போது நான் கவனித்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகள் மெல்லிய ஒலியுடன் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், அவர்கள் தங்கள் கடமைகளைத் தவறாமல் செய்துகொண்டே இயங்குவார்கள்.
விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், இலக்கை நோக்கி அவர்கள் உறுதியாகத் தம் பயணத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மேல் அதிகாரிகளின் அதட்டல், மேற்பார்வை எதுவுமே இல்லாமல் தாமாகவே உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பார்கள்.
வெள்ளி மாலை ஆனவுடன் கார்களில் மனைவி, குழந்தைகளுடன் அருகில் உள்ள ஊருக்குச் சென்று விடுதிகளில் தங்கி மகிழ்வார்கள். திங்கள்கிழமை அவர்களின் கடமை தொடங்கிவிடும்.
முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அவர்களிடையே தெளிவு இருக்கிறது. தீர்மானம் இருக்கிறது. பல வகைகளில் அயல்நாட்டாரைப் பின்பற்றும் நாம் அவர்களது கடமை உணர்வையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)