வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.
கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது
![]() |
![]() |
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார். |
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.
அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.
கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.
இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.
லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
![]() |
![]() |
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா |
சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.
மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.
இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.
கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.
பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.