பதவி உள்ளவரை தாவல்
கட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
கட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.
அதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.
தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டுவது சரியானதாக இருக்க முடியாது.
கட்சித் தாவலுக்கும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.
விகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.
இதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.
கிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.
ஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல முடியாது.
சில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச்சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.