மோட்சத்துக்குப் போகும் வழி!
ராணிப்பேட்டை ரங்கன்
“தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பது வெற்று வார்த்தைகள் மட்டும் அல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்னவை.
தமிழ்நாட்டவர்களின் பக்தி, நாட்டின் பிற மாநிலத்தவரின் பக்தியைவிட அலாதியானது. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே இங்கே பக்தி “”ஒரு மார்க்கமாகத்தான்” வளர்ந்து வருகிறது.
வேப்பிலை ஆடை கட்டுவது, மண் சோறு சாப்பிடுவது, மார்பில் கத்தி போடுவது, தலையில் தேங்காய் உடைப்பது, பாய்ந்து சென்று கோழியை வாயால் கவ்வி ரத்தம் குடிப்பது, திருமணம் ஆகாத கன்னிப்பெண் ஆடை அணியாமல் ஊரை வலம் வருவது (பாரதி ராஜா சொல்லாவிட்டால் நமக்கு இது தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை), தனியா சேர்க்காமல் மிளகாயை மட்டும் யாகத்தில் சேர்ப்பது, பாடைக் காவடியில் படுத்துச் செல்வது, தூக்கம் என்ற நேர்ச்சையில் தொங்குவது, ஏரோப்ளேன் காவடி, லாரி-வேன் டிரெய்லர் காவடி என்று பக்தியில் இத்தனை ரகங்களா என்று வியக்கவைப்பதில் வல்லவர்கள் தமிழர்கள்.
சென்னை மாநகர பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது அந்த சுவரொட்டி சற்றே வித்தியாசமாகக் கண்ணில்பட்டது. “”ஒரே காட்சியில் 3 திரைப்படங்கள்” என்பதே அது.
ஐம்பெரும் அறிஞர் கலைஞரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உச்சத்தில் இருக்கும்போதே தமிழ் திரையுலகுக்கு இப்படிப்பட்ட சரிவா என்று துணுக்குற்றேன். “”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்பது போய், மூன்றாகிவிட்டதே என்ற சிந்தனையோடு பஸ்ஸிலிருந்து இறங்கி, அதே சுவரொட்டியை அருகில் இருந்து படித்தேன். அப்போதுதான் தெளிவு பிறந்தது.
ஆம்… மகா சிவராத்திரிக்குத்தான் இந்த 3 திரைப்பட சிறப்புக் காட்சி. அடடா… தமிழ்நாட்டில் இன்னாருக்குத்தான் பக்தி, இன்னாருக்கு இல்லை என்று அவசரப்பட்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பக்த சிரோன்மணிகளின் நன்மைக்காகவே கோடம்பாக்கத்தார் சிந்தித்து இப்படி ஒரு விரதா வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மோட்சம் நிச்சயம் என்பதால், வெவ்வேறு வழிகளில் அதை கடைப்பிடித்தும் எதுவும் வெற்றிகரமாக இல்லாததால், பகுத்தறிவும் பக்தியும் ஒருங்கே கைவரப்பெற்ற தமிழன், ஏகாதசியன்று இரவில் ஒரே காட்சியில் 3 திரைப்படங்களைப் பார்த்து “மோட்சத்துக்குப்’ போக ஆரம்பித்தான். (அப்படி அந்த நாளில் தவறவிட்டவனுக்காகவே சென்னையில் மோட்சம் என்ற பெயரில் தியேட்டரைக் கட்டி வைத்திருக்கிறார்கள்)
வைணவத்துக்கு ஏகாதசி என்றால் சைவத்துக்கு சிவராத்திரி அல்லவா? சைவர்கள் மட்டும் தூங்கி நரகத்துக்குப் போக வேண்டுமா என்ற ஆதங்கத்தில்தான் இந்த 3 திரைப்படங்கள்.
இத் திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நல்ல பேக்கேஜ். அதில் ஒன்று மலையாளப்படம். சிவராத்திரி மட்டும் அல்ல, அதை அடுத்து வரும் ராத்திரிகளுக்கும் கண்விழிப்பு நிச்சயம்.
எங்கு எதைச் செய்தாலும் அதை பக்தி பூர்வமாகச் செய்வதில் தமிழனுக்கு நிகரே கிடையாது. முன்பெல்லாம் தனியார்தான் ஒயின் கடை வைத்திருந்தார்கள். மறக்காமல் விநாயகா ஒயின்ஸ், வெங்கடேஸ்வரா ஒயின்ஸ், அருணாசலா ஒயின்ஸ் என்று எல்லாவற்றையும் அந்த பரம்பொருளுக்கு அர்ப்பணித்துவிட்டே தொழிலை நடத்திவந்தார்கள்.
ஒன்று நிச்சயம் ஐயா, தமிழ்நாட்டில் பிறந்தவன் கூடாத நட்பால் பொதுவுடமைவாதியாகவோ, பகுத்தறிவாளனாகவோ மாறினால்கூட அவனை அந்த நடராஜன், சிவராத்திரி சமயத்தில் காந்தம்போல இழுத்துவிடுகிறான். எப்படி என்று கேட்காதீர்கள், அது “சிதம்பர ரகசியம்’.