ஏன் இந்தத் தயக்கம்?
விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.
மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.
கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?
பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?
ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.
இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.
ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?