புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஏப்ரல், 2008
இலங்கையின் மடு மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் சண்டைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தைச் சேர்ந்த மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 6500 பாடசாலை மாணவர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிலங்குளம் ஊடான மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பாதை மூடப்பட்டிருப்பதனால், மன்னார் நகரில் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் அரச செயலகத்திற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை கூறுகின்றார்.
ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச பாட நூல்கள் சென்று கிடைக்காமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இந்த மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.
இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடபகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் எழுபது பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அண்மித்த முன்னரங்கப் பகுதிகளில் பெரும்பாலும் நடந்த மோதல்களில் அரச படைத் தரப்பில் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் சார்பாகப் பேசவல்லவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது தரப்பில் மூன்று பேரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இராணுவத்தினர் முப்பது பேருக்கும் அதிகமானோரை தாங்கள் கொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சித்திரையே தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாட இந்துமா மன்றம் முடிவு
![]() |
![]() |
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் |
இந்தியாவில் தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பிற்குப் பதிலாக தைப்பொங்கல் தினத்தையே அங்குள்ள தமிழர்கள் தமது வருடப்பிறப்பாகக் கடைப்பிடிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இது தொடர்பாக இலங்கை இந்துமா மன்றம் அண்மையில் கொழும்பில் ஒரு கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் பிரபல சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவலர்கள், தர்மகர்த்தாக்கள், சோதிடர்கள் என்று பலரும் கூடி தமிழ்வருடப்பிறப்பு தையிலா அல்லது சித்திரையிலா என்பது குறித்து தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் சமுதாயக்கட்டமைப்பில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரை வருடப் பிறப்பே தொடந்தும் வருடப்பிறப்பாகக் கொண்டாட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக கொழும்பு செய்தியாளர் பி. கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஏப்ரல், 2008
இலங்கை போர்முனைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்து வெளியிடல்கள்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கை அரசப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டில் மட்டும் சுமார் 2000 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.
போர்முனைகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கையை சரி பார்க்க முடியாத நிலை உள்ளது.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருத்தரப்பும் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இது தொடர்பாக பிபிசியின் இலங்கை செய்தியாளர் ரோலண்ட் பேர்க் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008
சிங்கள மீனவர்கள் 10 பேரை தமிழக மீனவர்கள் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர்
இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தொடர்ந்து 10 சிங்கள மீனவர்களை சென்னை மீனவர்கள் சிறைபிடித்து அவர்களை சென்னை காசி மேடு மீனவர் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்திருக்கிறது.
சிங்கள மீனவர்கள் வந்த இரண்டு படகுகளும் தமிழக மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோதலில் சிங்கள மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறை கூறுகிறது. மீனவளத் துறை அதிகாரிகளால் சிங்கள மீனவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008
ஜேவிபியில் மோதலுக்கு என்ன காரணம்-ஆய்வு
![]() |
![]() |
உறவும் பிரிவும் |
இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக அந்தக் கட்சி பிளவுபடும் நிலையில் இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் தமிழோசையில் ஏற்கனெவே ஒலிபரப்பகியிருந்தன.
ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியானது மார்க்ஸிய சித்தாந்தம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரு கொள்கைகளையுமே கடைபிடித்து வருகிறது என்றும். அவர்களின் அடிப்படை கொள்கை திட்டங்களான போரை முன்னெடுத்துச் செல்வது மற்றும் தனியார் மயமாதலை நிறுத்துவது போன்ற செயல்களை தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷாவே செய்து வருவதால், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அதன் கையில் இல்லை என்று ஜேவிபி குறித்த ஆய்வை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அவர்களிடத்தில் இல்லாத நிலையில் கட்சியில் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் பெரும்பான்மையாக இருக்கும் குழுவினர் ஜனாதிபதியை மேலும் கடுமையாக எதிர்க்கும் நிலையையும் எடுத்துள்ளார்கள் எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.
![]() |
![]() |
ஜேவிபி மாநாடு ஒன்றில் தொண்டர்கள்-ஆவனப் படம் |
கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவானது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வலு சேர்க்கும் எனக் கூறும் அவர், வரக்கூடிய தேர்தல்களில் சிங்களவாத கட்சிகளான ஜேவிபி மற்றும் ஜேஹெச்யூ போன்ற கட்சிகளுக்கான ஆதரவுக் குறையக்கூடும் எனவும் கூறுகிறார்.
கட்சிக்குள் தொண்டர்களின் ஆதரவு, போட்டிக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச அவர்களுக்கே அதிகம் இருக்கக் கூடும் என தான் கருதுவதாக ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஏப்ரல், 2008
புனித இருதயநாதர் ஆலயத்தை தாம் சேதப்படுத்தவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே மடு மாதா தேவாலய வளாகத்தில் உள்ள புனித இருதயநாதர் தேவாலயத்தை இலங்கை இராணுவம் எறிகணைகளை ஏவி சேதப்படுத்தியதாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
தேவாலய வளாகத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் வகைதொகையின்றி எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயம் மிகவும் கடுமையாக சேதமடைந்திருப்பதை அண்மையில் வந்த ஒரு புகைப்படம் காண்பிக்கிறது.
மடு தேவாலயத்தின் மூலத் திருச்சொரூபம் ஏற்கனவே ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மடுவை அண்மித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
![]() |
![]() |
மடு தேவாலயம் |
இந்த புனித இருதயநாதர் ஆலயம் சேதமடைந்ததா,இல்லையா என்பது குறித்து தமக்கு இதுவரை பக்கசார்பற்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரான அருட்தந்தை விக்டர் சூசை. ஊடகங்கள் மூலமே தாமும் அந்த தகவலை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு பாதிரிமாரோ, அல்லது கன்னியாஸ்திரிகளோ எவரும் இல்லாத காரணத்தினால் அந்தத் தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயினும் போர் மோதல்கள் நடக்கின்ற பரப்பாங்கண்டல், வடமுனை பகுதிகளில் உள்ள பல ஆலயங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தமக்கு தகவல் தந்ததாகவும் அவர் கூறினார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கட்சியில் இருந்து தான் விலக்கப்பட்டதாகக் கூறுகிறார் வீரவன்ச
இலங்கையின் அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளரும், அதன் பாராளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றியுள்ள உரையொன்றில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற தலைமைப்பீடம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் கட்சியின் இந்த முடிவானது எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிப்பூசலினால் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் வெளியான செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதேவேளை, கட்சியின் இந்த முடிவுக்கு எதிப்புத் தெரிவித்தும், வீரவன்சவிற்கு ஆதரவு தெரிவித்தும் அந்தக் கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களில், சுமார் 11 உறுப்பினர்கள் இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டி, கட்சியின் தலைமைப் பீடத்திலுள்ள சில உறுப்பினர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியின் வலையில் சிக்கி, கட்சியின் பிரதான கொள்கைகளிற்கு எதிராகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
இவை குறித்து மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஏப்ரல், 2008
விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்துள்ளோம்: இலங்கை விமானப் படை
இலங்கையின் வடக்கே மாங்குளம் மற்றும் முகமாலை பகுதிகளில் விமானப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தளம் ஒன்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பின்னணி தளம் ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, வவுனியா, மன்னார் வெலிஓயா எனப்படும் மணலாறு ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
இந்தப் பகுதிகளில் ஞாயிரன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் இது குறித்து உடனடியாக கருத்து எதனையும் வெளியிடாத போதிலும், மன்னார் போர்க்கள முனைகளில் இந்த மாதத்தின் முதல் 5 தினங்களிலும் இடம்பெற்ற சண்டைகளில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் போன்றவற்றில் சிக்கியவர்கள் உட்பட இந்தக் காலப்பகுதியில் 120 படையினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். எனினும் இந்த விபரங்கள் குறித்து படைத்தரப்பிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்
![]() |
![]() |
படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் |
இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே கடந்த ஞாயிறன்று நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே உட்பட சுமார் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினை அமெரிக்கா மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடூர பயங்கரவாதச் சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் இலங்கை மக்களுக்கு மேலும் இன்னல்களை விளைவித்திருப்பதனைத் தவிர வேறெதனையும் அடையவில்லை எனத் தெரிவித்திருப்பதோடு, தொடர்ச்சியான வன்முறைகளால் அல்லாது, அரசியல் தீர்வொன்றினைக் காணுவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான ஒரேவழி என்றும் தெரிவித்திருக்கிறது.
கனடா, பிரான்ஸ், ஐரோப்பியன் ஆணையம் ஆகியவையும் இந்தத் குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
மடு பிரதேசத்தில் சண்டைகள் முடிவுக்கு வரவேண்டும் எனக் கோரி விசேட பிரார்த்தனை
![]() |
![]() |
அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளிக்கிறார் மன்னார் ஆயர் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்கின்ற உக்கிரச் சண்டைகளில் சிக்கியிருக்கும் மடுமாதா ஆலயப் பகுதியை யுத்த சூழலற்ற சமாதான வலயமாக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று விசேட வழிபாடு நடைபெற்றுள்ளது.
இந்த வழிபாட்டையடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரசாங்க அதிபரிடம் மன்னார் ஆயர் தலைமையிலான கத்தோலிக்க மதகுருக்களினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பூஜை வழிபாடு இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மடு பிரதேசப் பகுதியில் இடம்பெறுகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்புக்காக அங்கிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது
மடுமாதாவும் யத்தச் சூழலினால் பாதிக்கப்பட் பொதுமக்களைப் போன்று இடம்பெயர்ந்துள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி
அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.
இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன், இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும் தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ் உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.
பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
![]() |
![]() |
இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ் |
55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.
இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.
இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை அமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தடைகள்
![]() |
![]() |
ஏ9 பாதை |
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, வவுனியாவுக்குத் தெற்கே ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதவாச்சி சோதனைச்சாவடியை பொலிசார் உடனடியாக மூடியதாகவும். இதனால் பல மணித்தியாலங்கள் இந்த சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதாகவும் மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதவாச்சி சோதனைச்சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சோதனைச்சாவடியின் இருபக்கங்களிலும் வந்து குவிந்த பயணிகள் பிற்பகல் ஒரு மணியளவிலேயே சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இந்தச் சோதனைச்சாவடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து மாலை 5 மணிவரையில் தடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையில் பயணத் தடை காரணமாக மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய இடங்களில் உள்ள போர்முனைகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றம்
![]() |
![]() |
விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து சென்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, கடும் மழையினால் அழிந்ததன் பின்னர் எஞ்சியுள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்திலான நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக மன்னார் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடைக்கான இயந்திரங்களை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகக் கொண்டு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ள போதிலும், வயல்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அவற்றைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்ய முடியாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் திருஞானசம்பந்தர் அவர்கள் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வவுனியா பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வெளியேறுமாறு கூறியிருப்பதை மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை உறுதி செய்தார். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.
மடுமாதாகோவில் பிரதேசத்தை மோதல்கள் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை
![]() |
![]() |
மடுமாதா |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக மடுக்கோவிலில் இருந்து எடுத்துச செல்லப்பட்டுள்ள மடுமாதா திருச்சொரூபத்தைத் தற்காலிகமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டியில் தொடர்ந்து வைத்திருப்பது என்றும், மடுக்கோவில் பகுதியை மோதல்களற்ற சமாதான பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதனை அமைதி வலயமாக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் நேரடியாக வலியுறுத்துவது என்றும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் ஆயர் தலைமையில் அமைக்கப்படுகின்ற விசேட குழு, கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து தமது கோரிககை குறித்து வலியுறுத்தி எடுத்துக் கூறுவது என்றும், அதேவேளை, இலங்கை ஆயர் மன்றத்தின் ஊடாக மடுக்கோவில் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் வலியுறுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சூசை அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட
அருட்தந்தையர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், மடுக்கோவிலில் இருந்து மடுமாதாவின் சொரூபம் தேவன்பிட்டியில் உள்ள தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மடுக்கோவில் நிலைமைகள் குறித்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மடுக்கோவில் பிரதேசத்தில் தொடரும் உக்கிரச் சண்டைகளின் பின்னணியில் மடுக்கோவில் பற்றிய உண்மையான நிலைமை குறித்து அறிக்கையொன்றின் மூலம் வெளிக்கொணர்வது என்றும், மடுக்கோவில் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துக்களைச் சேகரிப்பது என்றும், வவுனியாவில் பேரணியொன்றை நடத்துவதுடன், மன்னார் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கத்தோலிக்கத் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் உண்ணா நோன்பிருந்து விசேட வழிபாடுகள் நடத்தி பிரார்த்திப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சூசை அவர்கள் கூறினார்.