சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழைய முயற்சி: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை, நவ. 29: சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழையும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனமான மார்ட் நுழைவதற்கு வகை செய்யும் முறையில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்பாடு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.
பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதாலேயே சில்லறை விற்பனைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி கட்சிகளுடன் வியாபாரிகள் அமைப்புகள் உள்பட பல அமைப்புகளும் எதிர்த்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில் மறைமுகமாக பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் நுழைய அனுமதியளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு இந்த முயற்சியை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையும் முயற்சியை ஒன்றுபட்டு முறியடிக்க முன்வருமாறு அனைத்துப் பிரிவு மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.