பலே தென்னிந்தியா!
“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.
இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.
கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.
தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.
மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.
இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.
மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.
எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.