2 ஆண்டில் சுங்கச்சாவடிகள் நவீனமயம்: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்- டி.ஆர். பாலு தகவல்
புதுதில்லி, நவ. 9: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்தார்.
பொருளாதார பத்திரிகை ஆசிரியர் மாநாட்டில் புதன்கிழமை பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து பரவலாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு -மேற்கு இணைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட உள்ளன.
அதாவது, வாகனங்களில் சிறிய மின்பொறி பொருத்தப்படும். அதற்குத் தொடர்புடைய முக்கிய மின்பொறி, சோதனைச் சாவடியில் அமைக்கப்படும். வாகனம் சோதனைச் சாவடி அருகே வரும்போது, அதிலுள்ள மின்பொறியின் சமிக்ஞைக்கும் சோதனைச் சாவடி மின்பொறிக்கும் தொடர்பு ஏற்படும். அப்போது, அந்த வாகனத்துக்கான சுங்கச் சாவடிக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
அதாவது, சுங்கச் சாவடிக் கட்டணத்தை முன்னதாகவே செலுத்தியதற்கான தகவல், வாகனத்தில் உள்ள மின்பொறியில் பதிவு செய்யப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கிறதோ, அப்போது தேவையான கட்டணம் குறைந்துவிடும். அதற்காக, வாகனம் அந்த இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும்.
இதேபோன்று எல்லா சோதனைச் சாவடிகளையும் நவீனப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.
ஏற்கெனவே, விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திறந்து வைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்றார் டி.ஆர். பாலு.