Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Eco’ Category

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »