சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி விடுவிப்பு
திண்டுக்கல், ஜன. 19: மாநில வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.
கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ஊரக வளர்ச்சி, சத்துணவு, பத்திரப் பதிவு ஆகிய துறைகளின் அமைச்சராக பெரியசாமி பணியாற்றினார்.
2001-ல் அதிமுக ஆட்சி அமைத்தது. இந் நிலையில், 2002, ஜூன் மாதம் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôர் இ.பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
13-05-1996 முதல் 14-05-2001 வரையிலான காலகட்டத்தில், பெரியசாமிக்கு வருமானமாக ரூ.14 லட்சம் மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், ரூ.72 லட்சம் வருமானம் இருந்ததால், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 லட்சம் சொத்துக்களை தனது மகன் பெயரிலும், உறவினர் நாகராஜ், நண்பர் ஜெகன்னாதன் ஆகியோரது பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இ.பெரியசாமிக்கு குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டது.
இந் நிலையில், குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் இ.பெரியசாமி உள்பட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுவித்ததுடன், வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி கற்பூரசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.