ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் தேன்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது 59. கடந்த 10 வருடங்களாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் துன்பப்படுகின்றேன். சாப்பாட்டுக்கு முன்பாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 330 மி.கி./க்ப் என்ற அளவில் உள்ளது. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நெருப்பில் சுட்டது போல் எரிச்சல், உணர்ச்சியற்ற தன்மையுடன் மரத்துப் போய் உள்ளது. ஆண்மைக் குறைவும் மலச்சிக்கலும் உள்ளது. என் உடல் உபாதை மாற ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.
சர்க்கரை வியாதிக்கான சிகிச்சைமுறை இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல ஆயுர்வேதம் கூறவில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர் நல்ல பலசாலியாக இருந்தால் கடுகெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் அல்லது புங்கெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை உடலுக்குத் தகுந்தவாறு பருகச் செய்து உடலின் உட்புறத்தில் குடல் மற்றும் ரத்தக் குழாய்களில் நெய்ப்பை உருவாக்கச் செய்வார்கள். நெய்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிகுறிகள் மூலம் அறிந்ததும் குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வாந்தி மற்றும் பேதி மூலம் வெளியேற்றி உடலின் உட்புறச் சுத்தியை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு தோஷநிலைகளை நன்கு அறிந்து ஆசனவாய் வழியாக மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட கஷாயத்தைச் செலுத்தி குடலைச் சுத்தமாக்குவார்கள். இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் உடல் சோர்வை நீக்க வறண்ட பிரதேசத்தைச் சார்ந்த பிராணிகளின் மாமிச சூப்பைப் பருகச் செய்து உடலுக்குத் தேவையான புஷ்டியை ஏற்படுத்துவார்கள்.
சர்க்கரை நோயால் மிகவும் மெலிந்து எந்நேரமும் உடலில் சோர்வை உணர்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளால் மேலும் உடல் தளர்வடையும் என்பதால் அதைச் செய்யாமல் அவர்களுக்குச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்துகளை மட்டும் கொடுப்பார்கள். அந்த வகையில் –
நெல்லிக்காயை இடித்துப் பிழிந்த ஸ்வரஸம் 2 அவுன்ஸ்(60 மிலி), தேன் 1 அவுன்ஸ், மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன் இவற்றை ஒன்றாய்க் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. (தேன் நாக்கில் பட்டதும் இனிப்பாகத் தெரிந்தாலும் ஜீரண இறுதியில் அது காரமாக மாறுவதால் சுத்தமான தேன் சர்க்கரையை குறைக்கத்தான் செய்யும்)
உணவில் சம்பா கோதுமையை முக்கிய உணவாக அமைத்து பாகற்காய், கோவைக்காய் போன்றவற்றைப் பொரியலாகவும், புளிக்கு பதில் நெல்லி முள்ளியையும் வறுத்த உப்பையும் சேர்ப்பார்கள். நாள் முழுவதும் இனிப்பே கிடையாதா? என்ற ஏக்கத்தைத் தவிர்க்க சீனாக் கற்கண்டை உபயோகிப்பார்கள். பசு, குதிரை ஆகியவற்றின் சாணத்திலிருந்து எடுத்த பார்லி அல்லது மூங்கில் விதையின் மாவினால் அப்பம், சத்துமாகஞ்சி முதலியவற்றைத் தயாரித்து உண்ணக் கொடுப்பார்கள். சாமை, பயறு, பழைய அரிசி, எள்ளு, கடுகு, நாவல் பழம், கசப்பான கீரைகள், கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் எனப்படும் திரிபலை, தர்ப்பை நீர், தேன்கலந்த நீர் ஆகியவற்றை உணவாக ஏற்றார்கள்.
வறட்சியான பொருள்களால் உடம்பை அழுத்தித் தேய்த்தல், தேகப் பயிற்சி, இரவு கண்விழித்தல் ஆகியவற்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார்கள். எங்கு சென்றாலும் குடை, பாதரட்சை இன்றி நடந்தே செல்லுமாறு சர்க்கரை நோயாளியை வற்புறுத்தினார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை வகை சிகிச்சையாலும் குறையாத சர்க்கரை வியாதியை வேங்கை, கருங்காலி வைரக் கட்டைக் கஷாயத்தில் மூழ்கி வைத்த 100 பலம் சிலாஜதுவை அதே வைரக் கட்டைக் கஷாயத்துடன் உட்கொண்டு மாமிச சூப்பைச் சாதத்துடன் உண்ணச் செய்தார்கள்.
இதன்மூலம் சர்க்கரை வியாதி மட்டுமல்ல, தைராய்டு, கேன்சர் கட்டிகள், முடிச்சு நோய், உடற்பருமன், குஷ்டம், பவுத்திரம், கிருமி, யானைக்கால் வீக்கம் போன்ற நோய்களையும் நீக்கச் செய்தார்கள்.
நிசோசீராதி தைலத்தை மேலுக்குத் தடவி வருவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் நீங்கிவிடும்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆண்மைக் குறைவு உபாதையும் நீங்கும். நெல்லிக்காய்ச் சாறு குடிப்பதால் மலச்சிக்கல் உபாதையும் குறைந்துவிடும்.
இடிந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டை, கம்புகளால் முட்டுக் கொடுத்து அதைத் தாங்கிப் பிடிக்கச் செய்து வீட்டைக் காப்பதுபோல நடைப்பயிற்சி – உணவுக் கட்டுப்பாடு – மருந்து எனும் கம்புகளால் சர்க்கரை வியாதியால் இடிந்து கொண்டிருக்கும் நம் மனித உடல் மேலும் சரியாது பாதுகாக்கப்படுகிறது.