காசநோயும் கட்டுப்பாடும்
எஸ். முருகன்
காசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.
காசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.
ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.
பெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.
நேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:
- அரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,
- தரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,
- தக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,
- மருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,
- கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.
நோய்க் குறிகள்:
- தொடர்ச்சியான இருமல்,
- கோழையுடன் கூடிய இருமல்,
- எப்போதும் சோர்வு,
- எடை இழப்பு,
- காய்ச்சல்,
- ரத்தத்துடன் கூடிய சளி,
- இரவில் வியர்த்தல்,
- பசியின்மை ஆகியவை.
நோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.
காசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.
சிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.
குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
காசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.
நீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.
இந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.
சிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.
காசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.
(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)