14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை
சென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.
அவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:
1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
2. சக்தி வை.கோவிந்தன்.
3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
4. த.நா.குமாரசாமி.
5. கா.சு.பிள்ளை.
6. புலவர் குலாம் காதிறு நாவலர்.
7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.
8. டாக்டர் சி.இலக்குவனார்.
9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.
10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.).
11. நாரண துரைக்கண்ணன்.
12. டாக்டர் மா.ராசமாணிக்கனார்.
13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.
14. புலவர் கா.கோவிந்தன்.
தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்
சென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
சிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
தற்போது 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
- சக்தி வை. கோவிந்தன்,
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,
- த.நா. குமாரசாமி,
- கா.சு. பிள்ளை,
- புலவர் குலாம் காதிறு நாவலர்,
- டாக்டர் சி. இலக்குவனார்,
- தி.வை. பண்டாரத்தார்,
- மகாவித்வான் தண்டபானி தேசிகர்,
- தி.ஜ. ரங்கநாதன் (திஜர),
- நாரண. துரைக்கண்ணன்,
- மா. ராஜமாணிக்கனார்,
- டாக்டர் வா.சுப. மாணிக்கம்,
- புலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.
நாட்டுடைமையாகும் நூல்களும் பரிவுத்தொகையும்
எஸ்.கே. அரவிந்தன்
முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
அன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.
இந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார்! இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.
பின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.
நாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.
ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.
ஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.
இவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.
ஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே!
மேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
சான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.
குடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.
எனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.
வாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா?
மிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்
![]() |
![]() |
தமிழக அரசின் தலைமைச் செயலகம் |
தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு
- குன்றக்குடி அடிகளார்,
- கி.ஆ.பெ,
- கி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.
ஆனால் உலக அளவிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.
பல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.