தென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது
இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.
கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
திருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு
![]() |
![]() |
இலங்கையில் வெள்ளம் – பழைய படம் |
இலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச
செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை
![]() |
![]() |
இலங்கை அரச படையினர் |
இலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்
![]() |
![]() |
படம் சுனாமி அகதி முகாம் |
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.
65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
அதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.