வானில் எழுந்த புதிய கவலை
தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.
இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.
2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.
இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.
விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.
புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.
விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.
=====================================================
மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?
பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
================================================
கேட்டுப் பெற முடியும்
இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.
கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?
விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.
கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?
12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.
ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.