குழந்தைகள் பாதுகாப்புக்கு அற்பத் தொகையை செலவிடும் அரசு
புது தில்லி, பிப். 12: குழந்தைகள் பாதுபாப்புக்காக அற்பத் தொகையையே அரசு செலவிடுகிறது என்பது அதன் செலவின விவரத்தை ஆராய்ந்தால் தெரியவருகிறது.
ஆனால், உத்தரப் பிரதேசம் நிதாரியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு உணர்த்துவது குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதியை அரசு செலவிடவேண்டும் என்பதே.
2005-06-ம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை நாட்டின் மொத்த செலவில் 0.035 சதவீதமே. இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு காட்டும் அக்கறை மிகக் குறைவாக உள்ளது என்பது புரியும்.
கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்தது.
இதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது மிக குறைவானதே என்பது தெரிய வந்துள்ளது.
2005-06ல் குழந்தைகள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 0.035 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. இது 2001-02ல் 0.027 சதவீதமாக இருந்தது.
குழந்தைகள் பாதுகாப்புக்காக அற்பத்தொகையை மத்திய அரசுக்கு ஒதுக்குவது பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2005-06ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நல திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை!
புது தில்லி, பிப். 17: குழந்தைகள் நல திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் இம் முறை பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் திட்டக்குழுவிடமும் முறையிட்டிருக்கிறார் மகளிர்-குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ரேணுகா செüத்ரி. மத்திய பட்ஜெட்டில் தொழில்வாரியாக, பிரதேச வாரியாக, சமூகவாரியாக முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி முக்கியத்துவம் தந்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேணுகா தான் முதலில் வலியுறுத்தியுள்ளார்.
“குழந்தைகள் நலம் என்பது சாதாரண விஷயம் அல்ல; சமுதாயத்தின் முக்கிய அங்கமான குழந்தைகள்தான் மனித ஆற்றல் வளத்தில் முக்கிய பங்குதாரர்கள். எதிர்காலம் அவர்களைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 14 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ல் நமது நாடு இந்தத் தலைமுறையினரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கப் போகிறது. எனவே இப்போதே அவர்களுடைய நலனுக்கு சிந்தித்து செலவு செய்வது நல்லது.
“ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளை வளரவிட்டு, பிறகு அவர்களுக்கு ஊட்டச் சத்து வழங்குவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துகளைத் தருவதற்கும் அரசுக்கு 3 மடங்கு செலவாகிறது. அதற்குப் பதிலாக சிறு வயதிலேயே அவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்க செலவிடுவது நிரந்தரப் பலன்களைத்தரும்.
“2005-06-ல் மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்காக என்று மொத்தம் ரூ.3,550 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் செலவில் 0.69 சதவீதம்தான். அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை.
மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் குழந்தைகளின் நலனுக்காக என்று தனி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலில் செய்திருக்கக்கூடிய சாதாரணச் செலவைப் போல 32 மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே முதலிலேயே குழந்தைகள் நலனுக்கு நேரடியாகச் செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, படிப்பு என்று தனித்தனியாகவோ, அல்லது தவணை முறையிலோ செலவிடாமல், குழந்தை வளர்ப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை அமல் செய்வது அவசியம். எங்களுடைய அமைச்சகம் அத்தகைய திட்டத்தைத் தயாரித்துவருகிறது.
இப்போதுள்ள அங்கன்வாடிகளையும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் எல்லா மாவட்டங்களிலும் தொடங்க விரும்புகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை, குறைபாடுள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தாமல் எல்லா பகுதிகளிலும் மேம்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறோம். எனவே இவற்றுக்கெல்லாம் மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், திட்டக் குழுவிடமும் கேட்டிருக்கிறோம்’ என்றார் ரேணுகா செüத்ரி.
=============================================================
அமலுக்கு வந்து 6 மாதங்களாகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்
புதுதில்லி, ஏப். 10: வீடுகளில் சிறார்களை பணிக்கும் அமர்த்தும் போக்கு இன்னும் தொடர்கிறது. அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கிறது குழந்தைத் தொழிளாளர் தடைச் சட்டம்.
உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்த நாடு இந்தியாதான். இங்கு, சமூக அக்கறையற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் சிந்திப்பதற்குப் பதிலாக அதை ஊக்குவிக்கும் போக்கு உள்ளது.
தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களின் பங்களாக்களில், நடுத்தர வர்க்க வீடுகளில் தரை துடைக்க, வீடு கழுவ, பத்துப் பாத்திரம் தேய்க்க சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு சர்வ சாதாரணமாக உள்ளது.
துள்ளித் திரிந்து படித்து மகிழும் வயதில் சிறுவர், சிறுமியர்க்கு வீட்டு வேலை என்பது கொடூரமல்லவா? ஆனால் “செல்வச் செழிப்புள்ள அல்லது நன்கு பணம் சம்பாதிக்கும், கல்வி கற்ற, நவீனமான, சிறார் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுள்ள மனிதர்கள்தான் சிறார்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்பது வேதனையான உண்மை’ என்கிறார் யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த கார்லட்டோ பார்கரோ.
தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்துவதை 1986-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தடை செய்கிறது. 1986-லேயே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் வந்து விட்டாலும், வீடுகள் மற்றும் உணவகங்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனம் திரும்பியுள்ளது.
“நீதித்துறை மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்த பலரது வீடுகளில் சிறார்களை வேலைக்கு வைத்திருப்பது எந்த விதத்திலும் வியப்புக்கு இடமில்லாத சாதாரணமான செய்தி’ என்கிறார் குழந்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்.
குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது வலிமையான ஆயுதமாகத் தோன்றினாலும் அதிகாரிகள் அதை ஏன் பிரயோகிப்பதில்லை?
“இந்தத் தடை அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது. முதல்கட்டமாக, பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் வழியாக தொடர் பிரசாரத்தின் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இதன் பிறகே மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும்’ என்கிறார் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.
அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற விதி 1999-ல் இருந்து அமலில் உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை. தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாத ஆய்வாளர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது? பிரச்சினை என்னவெனில் ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் இந்தக் கணக்கெல்லாம் காட்ட வேண்டியதில்லை.
அது மட்டுமன்றி, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது தனித்த பிரச்சினை அல்ல. தொழிலாளர், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
=============================================================