நெட்டில் சுட்டதடா…: ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கெட்டி!
ராமன் ராஜா
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் மகாத்மா காந்திக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது; இரண்டு பேருமே வெள்ளைக்காரர்களால் கடுமையாக ராகிங் செய்யப்பட்டவர்கள். ஆனால் காந்தியை அன்று அவர்கள் ரயிலிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டபோது அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இன்றைக்கு ஷில்பா ஷெட்டியை ஆதரித்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழும்பியிருக்கின்றன. விவகாரம் பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை எதிரொலித்திருக்கிறது. அதுதான் வித்தியாசம். ஆனால் ஆங்கிலேயர்களின் பார்வையில் மட்டும் எந்த மாறுதலும் இன்றி, இன்னும் நாம் பாம்பாட்டிகளாகத்தான் தெரிகிறோம் என்று தோன்றுகிறது.
பிரிட்டனில் சானல்-4 என்ற பிரபல டி.வியில் ஒரு பிரபல கேம் ஷோ. ஆணும் பெண்ணுமாக ஒரு பத்திருபது பேர் சேர்ந்து ஒரு பங்களாவில் பல வாரங்கள் வசிக்க வேண்டும். அங்கேயே சமையல், சாப்பாடு எல்லாம். வெளியே போகக் கூடாது; ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை வீடு முழுவதும் டஜன் கணக்கான காமிராக்கள் இருபத்து நாலு மணி நேரமும் கண்காணிக்கும். இதை வேலை வெட்டியில்லாத ஆயிரக்கணக்கான நேயர்கள் டி.வியில் பார்த்து ரசிப்பார்கள். (இப்போது இந்த அசட்டுப் பொழுது போக்கெல்லாம் இந்தியத் தொலைக்காட்சி வரை வந்து சேர்ந்துவிட்டது.) பெரியண்ணன் (க்ஷண்ஞ் க்ஷழ்ர்ற்ட்ங்ழ்) என்ற இந்த ஷோவில் கலந்து கொள்வதற்காக பாம்பே பார்ட்டி ஷில்பா ஷெட்டியும் லண்டன் போனார். அவரை வரவேற்றுப் பன்னீர் தெளித்தார்கள்; காமிரா வீட்டிற்குள் அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள். அப்போது ஆரம்பித்தது வேதனை.
வீட்டுக்குள் வசித்த வெள்ளை நிறத்தினர் எல்லாம் ஷில்பாவை விரோதமாகவே எதிர்கொண்டார்கள். விரைவிலேயே சின்னச் சின்ன வன்கொடுமைகள் ஆரம்பித்தன. ஷில்பா ஓர் இந்தியர் என்பதற்காகப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். “இந்தியன் இந்தியன்’ என்பதையே இளக்காரமான குரலில் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் “நாயே பேயே’ என்பது வரை போய் விட்டார்களாம். அதுவும் மூன்று லங்கிணிப் பெண்கள் கேங்க் ஆகச் சேர்ந்து கொண்டு ஷில்பாவைப் படாத பாடு படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில உச்சிரிப்பைக் கிண்டலடித்திருக்கிறார்கள். “”உங்கள் ஊரில் உருப்படியாக வீடு, கீடு ஏதாவது கட்டிக்கொண்டு வசிக்கிறாயா அல்லது எல்லா இந்தியர்களையும் போலத் தகரக் கொட்டகை, சாக்குப்படுதாவா?” என்ற ரீதியில் ஓர் ஊசி. கிச்சனில் போய் சிக்கன் செய்து எடுத்து வந்தால் அது சரியாக வேகவில்லை என்று ஒரு மாபெரும் கலாட்டா. ஒரு நடிகையைப் போய் நிஜமாகவே சமைக்கச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம்… டைரக்டர் கட் சொல்லும் வரைதானே கரண்டியால் கிளறிப் பழக்கம்?
ஷில்பாவுக்கு நடப்பதெல்லாம் அவ்வப்போது டெலிவிஷனில் ஒளிபரப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் கொதித்து எழுந்தார்கள். தாங்கள் தினமும் தெருவில் அனுபவிக்கும் வேதனைகளைத் தங்கள் அபிமான நடிகையும் சந்திப்பதைக் கண்டவுடன் அவர்களுக்கு எங்கோ மிச்சமிருக்கும் தேசபக்தி ஊற்றெடுத்து விட்டது. சானல்-4க்கு ஆயிரக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்தன. டாக் ஷோ ரேடியோ நிகழ்ச்சிகள், இன்டர்நெட் அரட்டை அறைகள் எங்கும் பிலுபிலுவென்று இதேதான் பேச்சாகிவிட்டது. ஷில்பா பிராணிவதைத் தடுப்பு சங்கத்தில் உறுப்பினர். எனவே, சங்கத்தின் அங்கத்தினர்களெல்லாம் லண்டன் குளிரில் சட்டையைத் துறந்து உடம்பெங்கும் சிறுத்தைப் புலி பெயின்ட் அடித்துக்கொண்டு “”வெள்ளையனே, ஓர் அப்பாவி இந்தியப் பிராணியை வதைக்காதே!” என்று காந்திகிரி செய்தார்கள். கடைசியாக வந்த தகவலின்படி ஷில்பா ஷெட்டி விவகாரம் ஒருவழியாக சமாதானம் பேசி முடிவாயிருக்கிறது. எது எப்படியோ, பெரியண்ணாவுக்கு இதனால் நல்ல வியாபாரம். சானல்-4 டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் எங்கோ எகிறிவிட்டது.
ஷில்பாவுக்கு நடந்த சில்மிஷங்களெல்லாம் பொதுவாக, ஆசிய, ஆப்பிரிக்கர்கள் எல்லாருக்கும் அங்கே நடப்பதுதான். உதாரணமாக ஷில்பாவை அவர்கள் “”பாக்கி பாக்கி” என்று ரேக்கி எடுத்தார்கள். (பாக்கிஸ்தான்காரி என்பதன் சுருக்கம்). இந்தியத் துணைக் கண்டத்தினரை இகழ்வதற்காகவே அவர்கள் கண்டுபிடித்துள்ள வட்டார வசவுச் சொல் இது. அவர்களைப் பொறுத்தவரை சற்று மாநிறமாக யாராவது தெருவில் போனாலே பாகிஸ்தானி என்று சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி பற்பல இனவெறிச் சொற்ரொடர்கள், சாராயக் கடைகளிலும் ஹைஸ்கூல் மாணவர்களிடையிலும் தினமும் ஏராளமாகப் புழங்குகின்றன.
இங்கிலாந்தில் இனவெறி எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அறிய, பிபிசி நிருபர் ஒருவர் ஒரு சின்ன பரிசோதனை செய்தார். பேப்பரில் வந்திருந்த அத்தனை வாண்ட்டட் விளம்பரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு சரமாரியாக வேலைக்கு விண்ணப்பம் போட்டார். ஆனால் இரண்டு செட் அப்ளிகேஷன் அனுப்பினார். ஒன்று ஜான், பீட்டர் என்பதுபோல் வெள்ளைக்காரத்தனமான பெயரில். மற்றொன்று -ஜாங்கியா சிங், சலீம் அலி என்பது போன்று வெள்ளையடிக்கப்படாத பெயரில். மற்றபடி கல்வித் தகுதி, அனுபவம் எல்லாம் இரண்டு அப்ளிகேஷன்களிலும் ஒரே மாதிரிதான். ஆங்கிலேயப் பெயரில் போட்டவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. மற்ற விண்ணப்பங்கள் போன இடம் தெரியவில்லை. நேரடியாக டாய்லெட் பேப்பர் செய்வதற்கு மூலப் பொருளாக அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.
அங்கே பல காலமாக கறுப்பு இனத்தவர்கள் வேலையில்லாதிருப்பது -பிழைப்புக்காகக் குற்றங்களில் ஈடுபடுவது -அதனால் வேலை வாய்ப்புக் கதவுகள் மேலும் இறுக மூடிக் கொள்வது என்பது விஷ வட்டம் போலத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. மைனாரிட்டி வகுப்பு மக்கள் வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதற்குக் காரணமே, வேலை கொடுப்போரின் இனவெறி மனநிலைதான். இனப் பாகுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் கமிஷன்கள் எல்லாம் அமைத்து வரைப்படங்கள் வரைந்து அறிக்கைகள் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கல்வி, வேலை, சம்பாத்தியம், குழந்தை இறப்பு விகிதம் இப்படி எந்தப் புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், முஸ்லிம்கள் எல்லாருமே, ஜாதி வெள்ளயர்களை விட இரண்டு படி கீழேதான் இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் நீங்கள் கார் ஓட்டும்போது சற்றே ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டாலும் ஓவர் ஸ்பீட் போனதற்காகப் போலீஸ்காரர் பிடித்து அபராதம் தீட்டிவிடுவார். அதே வேகத்தில் பக்கத்தில் ஒரு “வெள்ளைக்காரர்’ போனால் வெறும் அதட்டலுடன் தப்பித்து விட அவருக்கு சான்ஸ் அதிகம். அதுவும் சந்தேகத்துக்கிடமான நபர் ஆப்பிரிக்கர் என்றால் ஆன் தி ஸ்பாட்டிலேயே அடி உதை கூடக் கிடைக்கலாம். வெள்ளை போலீசார் கறுப்பர்களைத் தெருவில் போட்டு மிதிக்கும் காட்சிகளை எவ்வளவோ தற்செயல் காமிராக்கள் படம் பிடித்திருக்கின்றன.
இனவெறிப் பிரச்சினைகளில் இந்த அரசியல்வாதிகளாவது தங்கள் திருவாயைத் திறக்காமல் இருந்து தொலைக்கலாம். இருப்பார்களா என்ன? முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் வழக்கம் பற்றி அங்கே ரொம்ப நாளாகவே ஒரு விவாதம் இருக்கிறது. ஒரு நாள் பாராளுமன்றத் தலைவர் ஜாக் ஸ்ட்ரா ஒரு வாய் முத்து உதிர்த்தார். “”முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமானால் பர்தா போன்ற தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் துறந்துவிட வேண்டும்” (ஜாக் ஸ்ட்ரா என்ற வார்த்தைக்குக் கொடும்பாவி என்று அர்த்தம்!) இதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. நாடு முழுவதும் பர்தாப் பெண்கள் தெருவில் நடக்கவே முடியாமல் ஏளனம், சீண்டல், வம்பர்கள் அவர்கள் மீது பேப்பர் ராக்கெட் வீசினார்கள்; முக்காட்டைப் பிடித்து இழுத்தார்கள்.
இந்த அக்கிரமக்காரர்களெல்லாம் பக்கா ஜென்டில்மேன்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது, மற்ற சிலருடைய நடவடிக்கைகள். பாலத்தடியில் குந்தி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் முரட்டு இளைஞர் கூட்டங்கள், அவ்வப்போது ஆசியர்களை அடித்துத் தாக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கின்றன. இதற்குச் சிகரம் வைத்ததுபோன்ற நிகழ்ச்சி நடந்த வருடம் 1993. ஸ்டீபன் லாரன்ஸ் என்ற பதினெட்டே வயதான இளைஞர். கண் நிறைந்த கனவுடகளுடன் இருந்த ஆப்பிரிக்க மாணவர். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் செய்த ஒரே குற்றம், கறுப்புத் தோல் போர்த்தியிருந்தது. லண்டனில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அந்த ஏரியாவில் அலப்பறை பண்ணிக்கொண்டு திரிந்த வெள்ளைக் கும்பல் ஒன்றின் கண்ணில் பட்டுவிட்டார். திடீரென்று அவர்கள் காரணமின்றி ஸ்டீபன் மீது பாய்ந்து நீண்ட கத்தியால் சரமாரியாகக் கிழிக்க ஆரம்பித்தார்கள். தப்பித்து ஓட முயன்ற ஸ்டீபன் நூறு அடி ஓடுவதற்குள்ளாகவே தன் கறுப்பு ரத்தம் அனைத்தையும் வெள்ளையர் பூமியில் காலி செய்துவிட்டு உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த உடனே டெலிபோனில் ஆள் அடையாளத்துடன் தகவல் கிடைத்தும் பிரிட்டிஷ் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டாமல் காலம் கடத்தியதும், அடுத்து பத்து வருடத்திற்கு ஸ்டீபனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் கதவு கதவாகத் தட்டியதும், பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடைசியில் ஒரு வழியாகப் பாதி நீதி வென்றதும் -பிரிட்டனில் வசிக்கும் கறுப்பு இனத்தவருக்குக் கட்டபொம்மன் கதை மாதிரி ஒரு வீர வரலாறு.
அதன்பிறகு தொடர்ச்சியாக வருடத்துக்கு ஐந்து இனவெறிப் படுகொலைகளாவது பிரிட்டனில் நடக்கின்றன. அதிலும் 2005 ஜூலையில் லண்டனில் குண்டு வெடித்த நிகழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவது அதிகரித்துவிட்டது. எனவே நீங்கள் தாடி கீடி வைத்திருந்தால், இருட்டின பிறகு தயவு செய்து இங்கிலாந்துத் தெருக்களில் நடக்காதீர்கள்.
லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி: கோடிக்கணக்கில் பணம் குவிகிறது
லண்டன், ஜன. 30: லண்டன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த “பிக் பிரதர்’ என்ற கேம் ஷோவில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசுப் பொருள்களும், ஹாலிவுட் பட வாயப்புகளும் குவிகின்றன.
இதுகுறித்த விவரம்:
இங்கிலாந்தின் “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனம் “செலிபிரிட்டி பிக் பிரதர்ஸ்’ என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளின் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வீட்டில் தங்க வைப்பார்கள்.
அங்கு அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கி ஒளிபரப்பு செய்வார்கள். அதைப் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவரார்கள். இறுதி வரை யார் அங்கு இருக்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
சர்ச்சை: கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் பங்கேற்றனர். முதன்முறையாக இந்தியா சார்பில் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். முதல் வாரம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி, சக போட்டியாளர்கள் ஷில்பாவிடம் நடந்துகொண்ட முறையால் பலரின் கவனத்தையும், கண்டனத்தையும் பெற்றது.
ஷில்பாவை வெளியேற்றும் நோக்கத்தில் சக போட்டியாளரான ஜேட் கூடி ஷில்பாவை “நாய்’ என்றும், மற்ற இருவர் “அருவறுக்கத்தக்கவர்’, “ஆங்கிலம் பேசத் தெரியாதவர்’ என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.
புகார்: சக போட்டியாளர்கள் சிலரின் மரியாதைக் குறைவான செயல்களைத் தொலைக்காட்சியில் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன பாகுபாடு காரணமாகவே ஜேட் கூடி அவமரியாதையாக நடந்துகொண்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ மெயில் மூலமாகப் புகார் தெரிவித்தனர்.
ஆதரவு: இதன் காரணமாக ஜேட் கூடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஷில்பாவுக்கு ஆதரவு அதிகரித்தது. 14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு ஷில்பா, மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெற்றி: இறுதிச் சுற்றில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் விவரம் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். மற்றவர்கள் மிகக் குறைந்த சதவிகித வாக்குகளையே பெற்றனர்.
ஆனந்தக் கண்ணீர்: வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டதும் ஷில்பா ஷெட்டி ஆனந்தக் கண்ணீரோடு அறையை விட்டு வெளியே வந்தார். அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் அவரை கரகோஷத்துடன் வரவேற்றனர்.
`பிக்பிரதர்’ வெற்றியால் ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்தது
மும்பை, ஜன.30- இங்கிலாந்தில் சானல்4 டிவி நடத்திய பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி அபார வெற்றி பெற்றார். இன வெறியால் அவமானப்படுத்தப்பட்ட அவருக்கு 67 சதவீத ஆதரவு கிடைத்தது. இந்த வெற்றியால் நடிகை ஷில்பா ஷெட்டியின் புகழ்-அந்தஸ்து ஒரே நாளில் உலக அளவில் உயர்ந்து விட்டது.
31வயதாகும் ஷில்பா ஷெட்டி இது வரை 37 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியதால் இந்தி பட உலகம் அவ்வளவாக அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது. எனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.
மும்பை செம்பூரில் வசித்து வரும் ஷில்பா ஷெட்டி பெரும் பணக்காரர் என்று சொல்லும் அளவுக்கு மிக, மிக உயர்ந்த பொருளாதார நிலையில் இல்லாமல் இருந்தார். ஆனால் இன்று பிக்பிரதர் வெற்றிக்கு பிறகு அவர் கோடீஸ்வரர் விஐபிக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதோடு இது வரை இந்திய நடிகைகள் யாருக்கும் கிடைக் காத பப்ளிசிட்டியும், புகழும் அவருக்கு கிடைத் துள்ளது.
`பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் அவருக்கு ரூ.5கோடி கிடைத்தது. இது தவிர பரிசுப் பொருட் களும் குவிந்தன. உலகின் பல நிறுவனங்கள் ஷில்பாவை தங்கள் விளம் பரகாரர்ஆக்கு வதற்காக பரிசுகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தப்படி உள்ளன.
பிரபல நிறுவனங்கள் மூலம் மட்டும் ஷில்பாவுக்கு ரூ.10 கோடி வரை கிடைத்துள்ளது. பிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன் புதிய ஆலிவுட் படத்தில் ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளது. பிபிசியில் காமெடி தொடர் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றுக்கு ஷில்பாவை கேட்டுள்ளனர்.
வசனசர்த்தா சஞ்சீவ் பாஸ்கர் இது தொடர்பாக ஷில்பாவின் தாய் சுனந் தாவுடன் பேசி வருகிறார். இந்த காமெடி தொடர் மூலமாகவும் ஷில்பாவுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். இவை தவிர புத்தகங்கள் எழுதுவது, கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சியில் பங்கேற்பது, டி.வி டாகுமெண்டரியில் நடிப்பது போன்றவற்றுக்கு ஷில்பா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
லண்டனில் புகழ் பெற்ற ஆடை, அலங்கார, நகை டிசைன் நிறுவனங்கள் ஷில்பா விடம் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றன. இத்தகைய முதல் ரவுண்டி லேயே ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஷில்பாவை இன்று வரை வெளிநாட்டு நிறுவனங் கள்தான் முற்றுகை யிட்டு மொய்த்தப்படி உள்ளன. அவர் இந்தியா திரும்பியதும், அவருக்கு கிடைக்கப் போகும் பப்ளி சிட்டியைப் பொறுத்து ஷில்பாவுக்கு புதிய ஒப்பந் தங்கள் கிடைக்கலாம்.
எனவே இந்தியாவிலும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. சினிமாவில் தான் ஒரே பாடல் காட்சியில் கதாநாயகனின் அந்தஸ்து உயர்ந்து, அவன் பணக்காரனாகி விடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே `பிக்பிரதர்’ வெற்றி மூலம் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரே நாளில் ரூ.45 கோடி குவித்து சாதனை படைத்து விட்டார்.