“வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும்: சிம்பு
சென்னை, அக்.20: “வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு இயக்கி நடிக்கும் “வல்லவன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த சூழ்நிலையில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
படத்தை நீண்ட நாள்கள் இழுத்து எனக்கு அதிக செலவை ஏற்படுத்திவிட்டார் என்று தயாரிப்பாளரும், பேசியபடி எனக்கு சம்பளம் தரவில்லை என்று சிம்புவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு படம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டது.
இதுகுறித்து நடிகர் சிம்பு வியாழக்கிழமை கூறியதாவது:
“வல்லவன்’ படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சிறிது கால தாமதம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் வேறு படங்களில் நடித்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.
இந்தப் படத்துக்காக நான், என்னுடைய சம்பளத்தில் பாதிதான் கேட்டேன்.
இயக்குநர் சம்பளமாக படம் வியாபாரமாகும் தொகையில் 15 சதவிகிதமும், மற்ற படங்களில் நடிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு சென்னை விநியோக உரிமையும் கேட்டிருந்தேன்.
இதற்கெல்லாம் சம்மதித்த தயாரிப்பாளர் இப்போது நஷ்டம் என்கிறார். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் எனக்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும்.
படம் வெளிவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சம்பளம் ஒரு கோடி, நடிகர் சம்பள பாக்கி 60 லட்சம் இவை இரண்டையும் வேண்டாம் என்று சொல்லி சென்னை விநியோக உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டேன். இதுதான் நடந்தது.
நான் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் என்னால் இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும். ஒரு படத்தை இயக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு “வல்லவன்’ படம் என்னை உயர்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
தயாரிப்பாளர் தேனப்பன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது என்றார் சிம்பு.