வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை
தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.
அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.
திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-
அபிராமி ராமநாதன்
“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.
அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!
சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.
அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.
விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.
ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.
வருமானம்
பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.
கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.
இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!
இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.
இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!
சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.
சொந்தத் தொழில்
கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.
சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.
உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.
சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.
விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.
“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.
“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.
சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.
`அபிராமி’ உதயம்
இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.
1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.