‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்
ஜனவரி 04, 2007
சென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:
கேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.?
கருணாநிதி: ஏன் முடியாது? பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.
கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே?
கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.
அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.
அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.
பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.
கேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?
கருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்?
எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.
கே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா?
ப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `
அதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.