தேவை விழிப்புணர்வு!
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.
மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.
ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.
வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.
உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?
எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?