திரைப்பட வரலாறு 873
எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி”
கதை, வசனம், பாடல் எழுதிய கு.சா.கிருஷ்ணமூர்த்தி
எம்.ஜி.ஆர். நடித்த “அந்தமான் கைதி” படத்துக்கு கதை, வசனம், பாடல் எழுதி புகழ் பெற்றவர் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. “ரத்தக்கண்ணீர்” படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” என்ற பாடல் இவர் எழுதியதே.
நாடக உலகிலும், பிறகு சினிமா துறையிலும் புகழ் பெற்று விளங்கியவர், கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.
இவர், 1914-ம் ஆண்டு மே 19-ந்தேதி கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர் சாமிநாதபிள்ளை – மீனாட்சி அம்மாள்.
நாடக ஆசை
கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, நாடக ஆசை தொற்றிக்கொண்டது. எனவே, படிப்பை விட்டு விட்டு, பாய்ஸ் நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.
இவர் நாடக நடிகராக இருந்தபோது, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்றோர், நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கினார்கள். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்றபோது, கு.சா.கிருஷ்ணமூர்த்தி அந்தக் குழுக்களிலும் இடம் பெற்றார். ஒரு காலகட்டத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு நாடக வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. அதனால் புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார்.
அந்தமான் கைதி
இந்த சமயத்தில், வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தில் நடந்தது. அந்த சம்பவம் அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “அந்தமான் கைதி” என்ற நாவலை எழுதினார். அதை நாடகமாக்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை புத்தகமாக அச்சடித்து, 11/2 ரூபாய் விலை போட்டு விற்பனை
செய்தார்.டி.கே.எஸ்.சகோதரர்கள், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. டி.கே.சண்முகத்துக்கு, “அந்தமான் கைதி”யின் நாடகப் பிரதி ஒன்றை கிருஷ்ணமூர்த்தி அனுப்பி வைத்தார்.
அதைப்படித்த டி.கே.சண்முகம், “எடுத்தேன்; படித்தேன்; முடித்தேன். அற்புதம், அற்புதம், அற்புதம்!” என்று கிருஷ்ணமூர்த்திக்கு பதில் எழுதினார். “இந்த நாடகத்தை, என் நாடக சபை மூலம் மேடை ஏற்ற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்தார். “ஒருநாள் நாடகத்துக்கு, ராயல்டியாக (ஆசிரியருக்கான சம்பளம்) நாலணா கொடுத்தால் போதும்” என்றும் குறிப்பிட்டார்.
மூன்று வார ஒத்திகைக்குப்பின், “அந்தமான் கைதி” நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினர்.
நாடகம் பெரிய வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர்கள் “கல்கி”, “வ.ரா” போன்றோர், நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினர்.
சினிமா
“அந்தமான் கைதி” நாடகத்தை, 1952-ம் ஆண்டில் ராதாகிருஷ்ணா பிலிம்சார் படமாகத் தயாரித்தார்கள்.
எம்.ஜி.ஆர். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது. அவர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். “அந்தமான் கைதி” நாடகத்தில் கதாநாயகியாக நடித்த எம்.எஸ்.திரவுபதி, திரைப்படத்திலும் கதாநாயகியாக (எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக) நடித்தார்.
மற்றும் பி.கே.சரஸ்வதி, எஸ்.டி.சுப்புலட்சுமி, திக்குரிச்சி சுகுமாரன் நாயர், டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். லலிதா – பத்மினி – ராகினியின் நடனமும் இப்படத்தில் இடம் பெற்றது.
இந்தப் படத்துக்கு கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதினார். அக்காலத்து பிரபல இசை அமைப்பாளர் ஜி.கோவிந்தராஜ×லு நாயுடு இசை அமைத்தார்.
“அந்தமான் கைதி”, ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. கதையின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பெரிதும் பாராட்டப்பட்டன.
இந்தப் படத்தில் ஒரு பாடல். ஒரு பெரிய பை நிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு வரும் பி.கே.சரஸ்வதி, “அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி, மிச்சமில்லே. காசு மிச்சமில்லே. கத்திரிக்காய் விலை கூட கட்டு மீறலாச்சு; காலம் கெட்டுப்போச்சு” என்று பாடுவார்!
இது அன்றைய விலை நிலவரம். இப்போது அந்தக் காட்சியை எடுத்தால், “நூறு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தி…” என்றுதான் பாடலை மாற்றவேண்டும்!
ரத்தக்கண்ணீர்
தொடர்ந்து, பல படங்களுக்கு கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல்கள் எழுதினார்.
எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசை அமைத்துப் பாடிய “குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!” என்ற பாடல் கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியதுதான்.
இந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.
சின்னப்பா நடித்த “மங்கையர்க்கரசி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கு.சா.கிருஷ்ணமூர்த்திக்குத்தான் வந்தது. ஆனால், இளைஞரான சுரதாவை பட அதிபரிடம் அழைத்துச் சென்று, “இவர் திறமைசாலி. இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனால், வசனம் எழுதும் வாய்ப்பு சுரதாவுக்கு கிடைத்தது. கு.சா.கிருஷ்ணமூர்த்தியும், கம்பதாசனும் பாடல் எழுதினார்கள்.
கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் சுமார் 750. அவற்றில் மிகவும் பிரபலமான பாடல்கள்:-
* “நிலவோடு வான் முகில் விளையாடுதே…” (“ராஜராஜன்” படத்தில் ஏ.பி.கோமளாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்)
* எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்… (“தை பிறந்தால் வழி பிறக்கும்” படத்தில் டி.எம்.சவுந்தரராஜன் பாடும் பாட்டு)
* “சொல்லாலே விளக்கத் தெரியலே” (“சக்ரவர்த்தி திருமகன்” படத்தில் பி.லீலா பாடிய பாட்டு)
* “அகில பாரத பெண்கள் திலகமாய்…” (ஏவி.எம். “பெண்” படத்தில் வைஜயந்திமாலா பாடுவதுபோல் அமைந்த காட்சி. பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி)
* “காதல் கனிரசமே” (“மங்கையர்க்கரசி” படத்தில் பாடியவர் பி.யு.சின்னப்பா.)
அனுபவங்கள்
கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தன் கலை உலக அனுபவங்கள் பற்றி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
“திரை உலகில், நான் முதன் முதலில் பாடல் ஆசிரியனாகத்தான் நுழைந்தேன். “ஆண்டாள்”, “போஜன்” முதலிய படங்களுக்கு பாடல் எழுதினேன்.
“அந்தமான் கைதி” நாடகம் படமானபோது, கதை, வசனம், பாடல் எழுதினேன்.
நான் சென்னை வர காரணமாக இருந்தவர், ஜுபிடர் அதிபர் சோமு. அவர் என்னிடம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து, என்னை நிரந்தரமாக சென்னையில் குடியேறச் சொன்னார். ஜுபிடர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தேன்.
ஜுபிடர் பிக்சர்சார் “சந்திரகாந்தா” கதையை படமாக்க ஏற்பாடு செய்தனர். அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், நம்மாழ்வார் என்ற நடிகரை நடிக்க வைக்க இருந்தார்கள். நாடகங்களில் நடித்து வந்த பி.யு.சின்னப்பாவைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் வாதாடி, வெற்றியும் பெற்றேன். சின்னப்பாவுக்கு முதன் முதலாகப் புகழ் தேடித்தந்த படம் சந்திரகாந்தா.
வகீதா ரஹ்மான்
டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், “ஒன்றே குலம்” என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு கதை – வசனம் எழுதியது
நான்தான்.அப்போது ஒரு சிறு பெண், தன் தாயாருடன் வந்தார். “ஒரு சிறு வேடமாக இருந்தாலும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தில் நர்ஸ் வேடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்தான், பிற்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வகீதா ரஹ்மான்!
மெட்டு
பொதுவாக, நான் எழுதும் பாடல்களுக்கு நானே மெட்டமைத்து, பாடிக்காட்டுவேன். பிரபல இசை அமைப்பாளரான ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சுதர்சனம் போன்றோர், நான் போட்ட மெட்டையே `ஓகே’ செய்வதுண்டு.
டி.கே.எஸ். சகோதரர்களின் “அவ்வையார்” நாடகத்தில், நான் எழுதிய “பெருமை கொள்வாய் தமிழா” என்ற பாடலை டி.கே.சண்முகம் உணர்ச்சி பொங்கப் பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வந்திருந்தார். இந்தப்பாடல் பாடப்பட்டபோது, அதை எழுதியது நான்தான் என்று கவிமணியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். மெய்சிலிர்த்துப்போனேன்.”
இவ்வாறு கு.சா.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம்
கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1943-ல் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பாளராக இருந்தார். அப்போது, புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக (மன்னர் ஆட்சியில்) இருந்தது. அங்கு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கிய பங்கு கொண்டார்.
“சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.யின் நெருங்கிய சீடர்களில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். தமிழரசு கழகத்தை ம.பொ.சி. தொடங்கியது முதல், அதில் செயற்குழு உறுப்பினராக அங்கம் வகித்தார். எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.
சுரதா, கு.மா.பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரின் திரை உலகப் பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தவர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி.
“தமிழ் நாடக வரலாறு”, “அருட்பா இசை அமுதம்”, “என் காணிக்கை”, “அந்தமான் கைதி” முதலான நூல்களை எழுதியுள்ளார்.
1966-ல் தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற கு.சா.கிருஷ்ணமூர்த்தி, 1990-ம் ஆண்டு மே 13-ந்தேதி தமது 76-வது வயதில் காலமானார்