நினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்
அசோகமித்திரன்
(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.
வல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.
தி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் “தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.
ஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா? விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
நா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.
நாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.
நாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.
வல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.
வல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.
அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.
நான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.