நியாயமான கவலை
கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் கவனமெல்லாம் அவரது குடும்பத்தினர் தொடங்க இருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில்தான் இருக்கிறது என்றும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருடன் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவாகின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மக்கள் பிரச்னைகள் மலைபோலக் குவிந்திருக்கும்போது ஒரு மாநில முதல்வர் இதுபோன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம்தானா என்றுகூடக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரிய அளவில் உதவவில்லை என்பதில் யாருக்குமே இரண்டு கருத்து இருக்க முடியாது. தமிழ் கலந்த ஆங்கிலத்தில் உரையாடும் வழக்கத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை, தொலைக்காட்சிகளுக்கு நிச்சயமாக உண்டு. அவரது உறவினர்களின் தொலைக்காட்சி நடத்தப்படும் விதத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்களது வியாபார விஷயங்களில் தான் தலையிடுவது இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் முதல்வர்.
இப்போது அவரது குடும்பத்தினரே தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்க இருக்கின்றனர். அதுவும் அவரை முன்னிலைப்படுத்திக் கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்குகிறார்கள். இந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஜுர வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது. போதாக்குறைக்கு, முதல்வரின உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கலைஞர் தொலைக்காட்சியை வரவேற்று மூலைக்கு மூலை டிஜிட்டல் பேனர்களை வைத்து மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி வருகிறார்கள்.
சங்கத் தமிழையும், தொல்காப்பியத்தையும் சராசரித் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி, அவனது இலக்கிய ரசனையை அதிகப்படுத்தியவர் என்பதால், கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் எதிர்பார்ப்பு. திரையுலகுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதால், திரையுலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என்று அந்தத் துறையினர் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அடிப்படையில் அரசியல்வாதி என்பதாலும், திமுக என்கிற கட்சியின் தலைவர் என்பதாலும், அவரது பெயரில் தொடங்கப்படும் தொலைக்காட்சி, கட்சியின் கொள்கையைப் பரப்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கும்.
அதிமுகவின் ஜெயா தொலைக்காட்சியைப் பின்பற்றி முதல்வர் கருணாநிதியை முன்னிலைப்படுத்தும் கட்சி ரீதியான தொலைக்காட்சியாக கலைஞர் தொலைக்காட்சி இருக்குமா, வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா, இல்லை தமிழுக்கும் தமிழனின் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்த நிலைமையில், தனது பெயரில் தனது குடும்பத்தினரே தொடங்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி நினைப்பதிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே விவாதித்துத் தேர்ந்தெடுப்பதிலும் தவறு காண முடியாது.
கலைஞர் தொலைக்காட்சி ஒரு தரமான, அதே சமயம் ஜனரஞ்சகமான தொலைக்காட்சி அலைவரிசையாக அமைவது என்பது முதல்வர் கருணாநிதியின் கெüரவப் பிரச்னை. அதனால், அவரது கவலையில் நியாயமிருக்கிறது.