இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு அவசர கால நிதியைப் பயன்படுத்த தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு
மதுரை, பிப். 14: இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு அவசர கால நிதியை பயன்படுத்தத் தடை கோரி தாக்கலான மற்றொரு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் ம.சரவணன் தாக்கல் செய்த மனு விவரம்:
திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவசமாக கலர் டி.வி. வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 53 லட்சம் பேருக்கு கலர் டி.வி. வழங்க ரூ.1060 கோடி செலவாகும் என முதல்வர் அறிவித்தார்.
கலர் டி.வி. வழங்கும் திட்டத்தால் ஒரு குடும்பத்தினரே பயன் அடைவர். இதில் பொதுநலம் ஏதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும் குற்றம்சாட்டினார். மக்களின் பணத்தை அரசு வீணாக்கும் திட்டத்தில் செலவிடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
இதுபோன்ற இலவசத் திட்டத்தை அறிவிப்பதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குத் தகுந்த ஆலோசனை கூறலாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இந்த அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
இலவச டி.வி. திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. மேலும் இக் குழுவில் கூட்டணிக் கட்சியினரே இடம் பெற்றுள்ளனர்.
மத்திய திட்டப் பணிகளுக்கே போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்து இந்திய கணக்குத் தணிக்கைக் குழு மூலம் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்க வேண்டும்.
இதற்கான நிதியை அவசர கால நிதிக் கணக்கிலிருந்து எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் எலிப் தர்மாராவ், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.