சத்தீஸ்கரிலிருந்து நிலக்கரி தரவேண்டும்: பிரதமரிடம் ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்
புது தில்லி, பிப். 13: “”ராஜஸ்தானின் அனல் மின் நிலையங்களுக்கு தொலைதூரத்தில் உள்ள ஒரிசா, ஜார்க்கண்டிலிருந்து நிலக்கரி வேண்டாம்; அருகில் உள்ள சத்தீஸ்கரிலிருந்து ஒதுக்கச் சொல்லுங்கள், இதனால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரயில் சரக்குக் கட்டணம் எங்களுக்கு மிச்சமாகும்” என்ற முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றார்.
இத் தகவலை வசுந்தராவே தில்லியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் வற்புறுத்தி வந்த நிலையிலும் தொடர்ந்து தொலைதூர மாநில நிலக்கரி சுரங்கங்களிலிருந்தே நிலக்கரி வாங்கி வருகிறோம் என்றார் அவர்.
“2011-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் மின்சார உற்பத்தியில் உபரி என்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்; அதற்குத் தேவைப்படும் நிலக்கரி போதிய அளவில் கிடைத்தால் மட்டும் போதாது, உற்பத்திச் செலவும் கட்டுப்படியாகும் வகையில் அருகிலிருந்து கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இம் முறை நிலக்கரித்துறை பிரதமர் வசமே இருப்பதால் அவர் இக் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்’ என்றார் வசுந்தரா.
13 மெகா மின்னுற்பத்தி திட்டங்கள்: ராஜஸ்தானில் விவசாயம், தொழில்துறை ஆகியவற்றுக்கு போதிய அளவில் மின்சாரம் கிடைக்க 13 பெரிய திட்டங்களைத் தீட்டி நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறோம். பழுப்பு நிலக்கரி, இயற்கை நிலவாயு, நிலக்கரி ஆகியவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தவிருக்கிறோம்.
100 கோடி போதாது: பார்மர், ஜெய்சால்மர் உள்பட 16 மாவட்டங்களில், வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்பு நேரிட்டது. இதற்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வெறும் 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இத்தொகை போதவே போதாது. வெள்ளப் பகுதிகளை சோனியா காந்தியே நேரில் பார்த்திருக்கிறார். சேதமுற்ற பகுதிகளில் நிவாரணப்பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மொத்தம் ரூ.3,200 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம்: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்த நாடு முழுவதும் 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ராஜஸ்தானில் 6 மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் 32 மாவட்டங்களைத் தேர்வு செய்துள்ளனர். நிலப்பரப்பு அளவில் ராஜஸ்தான் மிகப்பெரியது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள் அதிகம் உள்ள மாநிலமும் ராஜஸ்தான்தான். எனவே இந்த திட்டத்தின் கீழ் வரும் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறேன்.
நிதிச் சீர்திருத்தம்: நிதிச் சீர்திருத்த அமலில் ராஜஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதற்காகவே சிறப்பு ஒதுக்கீடாக ரூ.400 கோடியை தருமாறு கோரியிருக்கிறேன் என்றார் வசுந்தரா.