இலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் முன்னூறு முதல் ஐநூறுபேர் வரை இப்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரின் உறவினர்களோடு இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இவர்கள் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கைதுகள் குறித்தும், அரசு தரப்பில் இது குறித்து கூறப்படும் விளக்கங்கள் குறித்தும், இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் – இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
![]() |
![]() |
இந்தியாவும் இலங்கையும் |
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சி மாநாடு புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.. அதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருமான சோஸ் சாக்ரடீஸ் மற்றும் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
அந்த மாநாட்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், தீவிரவாதம் உள்பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தொடர்பாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியக் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இலக்கை அடைய, சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியப் பங்காற்றும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்பு உள்பட சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இலங்கையில் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.