ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்
நகரி, பிப். 11-
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.
இப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.
தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.
அப்போது திருடர்கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.
பின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.
அவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் பொது நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.
இதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.