காவிரி டெல்டாவின் பரிணாமமும் பல்லுயிர்ப் பெருக்கமும்
பாலசுப்ரமணியன்
நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டுள்ள மனிதன், நவீனமயமாதல், நகரமயமாதல் போன்ற செயல்களால் இயற்கைத் தாவரங்களையும், விலங்குகளையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறான்.
உலக அளவில் இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால், பல தாவர மற்றும் விலங்குச் சிற்றினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. உலகிலுள்ள 12 மிக முக்கிய உயிரின வாழிடங்களில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மற்ற டெல்டாக்களுடன் ஒப்பிடும்போது காவிரி டெல்டாவின் புவியியல் கூறு, சூழ்நிலை அமைப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவை முற்றிலும் மாறுபட்டது.
தற்போது காணப்படும் காவிரி டெல்டா இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டு புதியதாகத் தோன்றி, வளர்ச்சியடைந்த ஒரு பகுதியாகும்.
கால அட்டவணையின்படி சுமார் 315 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி டெல்டா பகுதி கடல் நீரால் சூழப்பட்டிருந்தது எனத் தெரிகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாற்றங்களால் கடல் நீர் குறைந்து, உவர் மண் நிரம்பிய சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. மேலும் காவிரி ஆறு, சில இயற்கை மாற்றங்களால் தனது போக்கை கிழக்கு மற்றும் தென்கிழக்காக மாற்றிக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக வண்டல் மண்படிவுகள் சிறிது சிறிதாக ஏற்பட்டு, தற்போதைய டெல்டா உருவானது. ஆயினும் காவிரி டெல்டாவின் தென்கிழக்குப் பகுதிகளான முத்துப்பேட்டை, வேதாரண்யம், கோடியக்காடு போன்றவற்றில் தற்போது சதுப்பு நிலங்கள் உள்ளன. விவசாய முன்னேற்றத்துக்காக தற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்களும், சங்ககால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கல்லணை மற்றும் கல்லணைக் கால்வாயும் ஆங்கிலேயர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட நரசிங்க காவிரி, வடவாறு, உய்யக்கொண்டான் கால்வாய், முல்லையாறு விரிவு, மேல் மற்றும் கீழ் அணைக்கட்டுகள் போன்றவை இன்றைய புதிய காவிரி டெல்டா உருவானதற்கு முக்கியக் காரணமாகும்.
பல்லுயிர் வகை: இந்த டெல்டாவில் கடற்கரையை ஒட்டிய ஒரு சில சதுப்பு நிலக் காடுகளும், கோடியக்காட்டில் உள்ள வறண்ட பசுமை மாறாக் காடும் சில முட்புதர் காடுகளையும் தவிர வேறு குறிப்பிடத்தக்க காடுகள் ஏதும் இல்லை.
தற்போது ஆற்றுப்படுகைகளில் அரசின் தீவிர முயற்சியால் தோன்றியுள்ள தேக்கு, டால்பர்ஜியா சிசு போன்ற மரங்களின் சமூகக் காடுகள் ஓரளவு பசுமைத் தாவரங்களை அதிகரித்துள்ளன.
எங்கும் பரந்து விரிந்து, பச்சைக் கம்பளம் போல் நெல்வயல்கள் நிறைந்து காணப்படும் மருத நிலமான காவிரி டெல்டாவில் பல்வேறு வகையான பறவையினங்கள், பூச்சியினங்கள், விலங்குகள் மற்றும் மருத்துவக் குணமுள்ள பல தாவரங்கள் காணப்படுகின்றன.
ஆனால் தற்காலத்தில் தொடர்ச்சியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும், இங்குள்ள நீர் மற்றும் மண் மாசுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.
மேலும் அனைத்து ஆறுகளிலிருந்தும் இன்று மணல் முற்றிலுமாக எடுக்கப்பட்டு, அது டெல்டாவின் பல பகுதிகளில் வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டன. மணல் எடுக்கப்பட்டதால் அவ்விடங்கள் அனைத்திலும் அடர்த்தியாக பரவியுள்ள காட்டாமணக்கு தாவரமானது, ஆற்றில் வரும் சிறிதளவு நீருக்கும் வழிவிடாமல் அடைத்துக் கொண்டு பாசனத்திற்குத் தடை ஏற்படுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை, மழையின்மை காரணமாக பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. நன்செய் நிலங்கள் இவ்வாறு மாறிவிட்ட நிலையில், புன்செய் நிலங்களிலோ பூத்துக் குலுங்குவது காட்டுக்கருவை எனப்படும் வேலிக்காத்தான் தாவரம். இது காவிரி டெல்டாவின் பல பகுதிகளில், தரிசு நிலங்களில், தன்னிச்சையாகப் பரவியுள்ளது.
வேலிக்காத்தான் தாவரம் வளரும் இடங்களில், மற்ற தாவரங்கள் வளர்வதைத் தடை செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனால் இந்தப் பகுதிகளில் இயற்கையாக வளரும் பல மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் வளர முடியாமல் அழிந்து வரும் அபாயம் உள்ளது. உதாரணமாக கொடி வகையைச் சார்ந்த ஆடுதின்னாப்பாலை, வேலிப்பருத்தி எனப்படும் உத்தாமணி, பிரண்டை, செங்கலை, கரு ஊமத்தை, பேய் சுரை, ஓரிதழ் தாமரை… போன்றவை இன்று தன்னிச்சையாக வளர்வது குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் வேலிகளில் நடப்பட்டு வந்த நாட்டுத் தேக்கு எனப்படும் பூவரசு மரங்களும் குறைந்துவிட்டன.
ஒருகாலத்தில் இந்த டெல்டாவில் தோப்புகளாகக் காணப்பட்ட இலுப்பை மற்றும் புளிய மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் பல புளிய மரங்கள் இன்று சாலைகளை அகலப்படுத்தும் பொருட்டு வெட்டப்பட்டு விட்டன. மருத்துவக் குணமுள்ள மருத மரங்களோ, எங்காவது ஒரு சில இடங்களில் இருந்தால் உண்டு.
இன்று இப்பகுதிகளில் நவீன விவசாயக் கருவிகளாலும், குளிரூட்டப்பட்ட பால் விற்பனையாலும், எருதுகள் மற்றும் கறவை மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கையான தொழு உரம் வயல்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல், செயற்கை உரங்கள் இடப்படுகின்றன.
மழைக் காலங்களில் காணப்படும் “செண்பகம்’ எனப்படும் காக்கை இனத்தைச் சார்ந்த பறவைகளை தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை. நகரமயமாக்கலால் பல பாசனக் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு, மழைநீர் செல்லும் பாதைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சமுதாய நிலங்களும், குளங்களும், சிற்றோடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அரசு கையகப்படுத்தி, தகுந்த இயற்கைச் சூழ்நிலையை உருவாக்க வழிகோல வேண்டும்.
நீர் நிலைகளில் பல்கிப் பெருகிவிட்ட வெங்காயத் தாமரை, காட்டாமணக்கு போன்ற இடர்தரும் தாவரங்களைக் களைந்து சீரான நீர் ஆதாரங்களைப் பல்லுயிர் பெருக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.
இனியாவது, ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாக இருந்து வரும் தாவரங்களையும் விலங்குகளையும் அழியாமல் காப்போம்.
காவிரி டெல்டாவின் பசுமையைக் காக்க பயன் தரும் மரங்களை அனைத்துப் பகுதிகளிலும் உயிர் பெறச் செய்வோம். மாசுபாடற்ற விவசாய முறைகளைக் கையாண்டு, பல்லுயிர்கள் இந்நிலத்தில் பெருக வழி செய்வோம்!