எம்.பி.பி.எஸ். அல்லது பி.இ.: பொன்முடி
சென்னை, மே 23: மருத்துவ சீட்டில் இடம் பெற்ற பிறகும் பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்கும் சிலர் அந்த இடத்தில் சேராமல் விடுகிறார்கள். இனி அவ்வாறு செய்ய இயலாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
சில மாணவர்கள் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைத்த பிறகும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கிலும் பங்கேற்று, பின்னர் அதில் சேராமல் கைவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் காலியாகிவிடுகின்றன.
கடந்த ஆண்டு ஒரு சில மாணவர்கள் அவ்வாறு செய்ததாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தடுக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் பி.இ., கவுன்சலிங்கில் பங்கேற்றால், “பி.இ. சீட் கிடைத்த பின் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைப்பேன்’ என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே சேர இயலும். மேலும், எம்.பி.பி.எஸ். சீட் காலியாகாமல் பின்னர் நடைபெறும் கவுன்சலிங்கில் நிரம்பிவிடும்.
கல்லூரி ஆசிரியர் நியமனம்: கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சில நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தும்போது சில நடைமுறைகள் பின்பற்றப்படும்.
கல்லூரிகளில் தற்போது கெüரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரில்
- 7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 15 மதிப்பெண் தரப்படும்.
- பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்;
- எம்.ஃபில். முடித்து ஆசிரியர் பணித் தேர்வுகளை (ஸ்லெட், நெட்) எழுதி வெற்றி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்;
- முதுநிலை மட்டும் முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்தால் 5 மதிப்பெண்;
- புத்தகங்கள், ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தால், 5 மதிப்பெண்;
- நேர்காணலுக்கு 10 மதிப்பெண் தரப்படும்.
- மொத்தம் 2,062 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அமைச்சர் பொன்முடி.
ஜூலை 2 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்
மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஜூலை 8-ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது.
இந்த இரு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான பிறகு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெறும். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
——————————————————————————————-
சுமையாகலாமா கவுன்சலிங்?
பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு (கவுன்சலிங்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். எனினும், பொதுமக்கள் வலியுறுத்தினால், வெவ்வேறு மையங்களில் கலந்தாய்வை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.
சில பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்க்கு “விற்பனை’ செய்வது குறித்து யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார். சில சமூகப் பிரச்சினைகளில் மக்கள்தான் புகார் தர வேண்டும், மக்கள்தான் வலியுறுத்த வேண்டும் என்று மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள அரசு காத்திருப்பதில்லை.
நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் தர்ணா நடத்தவில்லை. ஊர்வலம் போகவில்லை. கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியதை ஏற்றுத்தானே அரசு தீவிரமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தது?
அதைப் போல், கலந்தாய்வு முறை குறித்தும், நன்கொடை குறித்தும் பத்திரிகைகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் வரும் புகார்களையே அடிப்படையாகக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தபோது, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், 65 ஆயிரம் பொறியியல் இடங்களுக்கு இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சில கேள்விகளை இப்போது எழுப்பியுள்ளது.
முன்பெல்லாம் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்களில் கலந்தாய்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். இந்த முறை 87 ஆயிரம் பேர் 65 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பிப்பதால், கடும் போட்டி நிலவும். அதை அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது?
ஒரே அண்ணா பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் நான்கு மையங்களில் கவுன்சலிங் நடைபெற்றது. தற்போது நான்கு அண்ணா பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, ஒரே இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்துவதால் குழப்பம் நேராது என்று என்ன நிச்சயம்?
கிராமப்புற மாணவர்களுக்காக என்று கூறும் அரசு, விண்ணப்பப் படிவங்களின் விலையை ரூ.500 என்று நிர்ணயித்தது ஏன்? கலந்தாய்வுக் கட்டணத்தையும் ரூ.100 மட்டுமே குறைத்துள்ளது.
கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுவதால், தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது துணைக்கு வருபவரின் பஸ் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அது மட்டும் பலன் தருமா, சென்னையில் தங்குவதற்கு சுமார் ரூ.2000 வரை செலவு ஆகும். இவையெல்லாம் அவர்களுக்கு நிதிச் சுமை இல்லையா?
ஏராளமானோர் பி.இ. இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் மக்களுக்கு அதிகரித்து வரும் நாட்டமும் அதன் வேலைவாய்ப்புமே காரணம் என்பது தெரியும். ஆனால், ஆண்டுதோறும் பலரும் விழையாமல் இருக்கும் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
சிலசமயம் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிலும் சில மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் இடம் கிடைத்த பிறகு சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பையே தக்க வைத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பி.இ. சீட் காலியாகவே போய்விடுகிறது. இதைத் தவிர்க்க, எம்.பி.பி.எஸ். கிடைத்த மாணவர்கள் “பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்றால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாட்டேன்’ என்று எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அது வரவேற்கத் தக்கதே.
கடந்த ஆண்டுகளைப் போல் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் வழக்கு, விவகாரம் என்று இதுவரை அதிக குழப்பம் இல்லை என்பது உண்மை. குழப்பம் மட்டுமன்றி, சுமையையும் தவிர்ப்பது அரசின் கடமை.
பொதுமக்களின் கூக்குரலுக்கும், வலியுறுத்தலுக்கும் காத்திராமல் கவுன்சலிங்கை குறைந்தது நான்கு மையங்களிலாவது நடத்த அரசே முன் வரவேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு அழகு!
————————————————————————————————-
அரசின் அலட்சியத்தால் 300 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் 300 மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“”மருத்துவர் ஆக வேண்டும் என மாணவர் சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளோடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவராக உருவாக்கும் முயற்சிக்குத் திமுக அரசின் தவறான கொள்கை மற்றும் தெளிவற்ற தொலை நோக்குப் பார்வையே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
தமிழகத்தில் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புப் படித்து சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2001 – 06 ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டன.
தற்போது திமுக அரசின் அலட்சியப் போக்கால் இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
என்னுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் போதிய அடிப்படை வசதிகள், குறிப்பாக பேராசிரியர்கள், கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து
- 2004-ல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும்
- 2005-ல் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும்
- 2006-ல் உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டன.
இந்த 3 மருத்துவக் கல்லூரிகள் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வேறு எங்கும் மாறுதல் அளிக்காமல் தொடர்ந்து அதே மருத்துவக் கல்லூரியிலேயே பணியாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.
ஆனால் திமுக ஆட்சியில் இந்த மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வு அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே திமுக அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 300 மருத்துவர்கள் உருவாவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 300 மருத்துவ இடங்களை இந்த ஆண்டே மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.”