இலங்கையில் ஜப்பானின் அமைதித் தூதர் யசூஷி அகாசி
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை நடத்த ஜப்பானின் அமைதி தூதர் யசூஷி அகாசி இலங்கை சென்றுள்ளார்.
யசூசி அகாசி இலங்கையில் மூன்று நாட்கள் இருப்பார் என்று கொழும்பில் இருக்கின்ற ஜப்பான் தூதுரகம் தெரிவித்துள்ளது. எனினும் மேலதிகமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இவரின் விஜயம் தொடர்பாக தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை பகுப்பாய்வாளர் யூ.வி. தங்கராஜா, அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு கடினமான போக்கை கொண்டிருந்தால், தங்களுக்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அரசாங்கத்திடம் ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூஷி அகாசி கூறலாம் என்கிறார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
மட்டக்களப்பில் பள்ளிவாசல் அருகில் துப்பாக்கிச் சூடு
![]() |
![]() |
பள்ளிவாசல் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் முன்பாக கூடியிருந்தவர்கள் மீது சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆட்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பள்ளிவாசல் பேஷிமாம் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
ஆரையம்பதி – கர்ததான்குடி எல்லையிலுள்ள கர்பாலா கிராமத்தில் ஜாமி – உல் ஹசனத் பள்ளிவாசலில் இரவு நேர இஷா தொகையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவதற்காக நின்றவர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆரையம்பதி பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள ஆயுதக் குழுவொன்றே இதற்கு பொறுப்பு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை, அந்த குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தசநாயக படுகொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்கிறார் நடேசன்
![]() |
![]() |
விடுதலைப் புலிகளின் பா நடேசன் |
சமீபத்தில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை அமைச்சர் தசநாயக படுகொலைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று அந்த அமைப்பின் அரசியல் துறை பொருப்பாளர் பா நடேசன் பி பி சியிடம் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் ராணுவம் சாரா இலக்குகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க முடியும் என்று தாம் நம்புவதாகவும், அதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் பி பி சியிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு பொருளாதார உதவி தொடரும் – ஜப்பான்
![]() |
![]() |
இலங்கை ஜனாதிபதியுடன் ஜப்பானிய தூதர் |
இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவிகளை வழங்கிவரும் ஜப்பான்
அரசு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றது என்று கொழும்பிற்கு மூன்று நாட்கள் அவசர விஜயம் ஒன்றினை முடித்துக்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இன்று தெரிவித்திருக்கிறார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்ற இலங்கையின் உத்தியோகபூர்வ முடிவுகுறித்து தனது கவலையினையும், இதனால் நாட்டில் ஏற்படக்கூடிய அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, தான் தெரிவித்ததாகவும் அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்படவேண்டி ஜப்பான் விடுத்துவரும் கோரிக்கையினை இம்முறை அரசபிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வலியுறுத்திக்கூறியதாகத் தெரிவித்த அகாஷி, இலங்கையில் நிலவும் அரசியல், இராணுவ மற்றும் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பான் தொடர்ந்தும் கூர்ந்து கவனிக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் அரசினால் வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படலாம் என்று ஊடகங்களில் பரவலாக வெளிவந்த ஊகங்கள் குறித்தும், இது குறித்து இன்று பத்திரிகையாளர்கள் கேட்டகேள்விகளிற்கும் நேரடியாகப் பதில் எதனையும் கூறமறுத்த அகாஷி, இந்த உதவித்திட்டம் என்பது பல்வேறுபட்ட காரணிகளைக் ஒட்டுமொத்தமாகக் கருத்திலெடுத்து, அதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், ஆனாலும் சிறிய காரணியின் அடிப்படையிலேயோ, அல்லது சிறிய நிகழ்வின் அடிப்படையிலேயோ மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.