நர்த்தகி நடராஜ் உடனான சென்ற வார சந்திப்பின் தொடர்ச்சி…
‘‘லண்டன் பி.பி.ஸி.யில், ஒரு பரதக் கலைஞர் என்கிற முறையில், என்னைப் பேட்டி காண அழைத்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் சமாளித்துப் பதில் சொன்னேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் அந்த நிருபர் : ‘நீங்கள் பரத நாட்டியக் கலைஞராகியிராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?’
பேட்டி காணப்படும் பலரிடம் கேட்கப்படக் கூடிய சராசரிக் கேள்விதான் இது. ஆனால் என் பதில் மட்டும் சராசரியானதல்ல…
‘பரதக் கலைஞராக உயர்ந்திராவிட்டால் மும்பை அல்லது கொல்கத்தாவில் விலைமாதாக இருந்திருப்பேன்’ என்று சொன்னேன். உண்மையும் அதுதான்!’’
பால் திரிபுக்குள்ளாகும் அனேகம் குழந்தைகளைப் போல் நர்த்தகியும் பெற்ற தாயால் வீட்டை விட்டு விரப்பட்டு வெளியேறியவர்தான். சிறிய வயதிலேயே சக்தி துணையாக வாய்த்ததால் இருவரும் சேர்ந்தே குடும்பம் ஏற்படுத்திய காயங்களையும் பள்ளிச் சூழல் இழைத்த அநீதிகளையும் தாங்கி வளர்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள் நிகழ்வது என்ன என்று புரிவதற்குள் இரக்கமற்ற, உயிர் உறிஞ்சும் வெளி உலகில் வந்து விழுந்து, திருநங்கைக் கூட்டத்தில் இணைந்து, அந்த வாழ்க்கை முறை தவறு என்ற விவேகம் இயல்பிலேயே இருந்ததால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கலை ஆர்வம் இவர்களை தஞ்சையில் கிட்டப்பா பிள்ளையிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. கடுமையான சோதனைக்குப் பிறகே அவரும் இவர்களை சிஷ்யைகளாக ஏற்றிருக் கிறார். வெளியே தங்குவது நித்திய சோதனையாக இருக்கவே, வீட்டிலேயே அடைக்கலம் கேட்டு இந்த மாணவிகள் இறைஞ்ச, அவரும் ஏற்றுப் பாதுகாப்புத் தர, அதுவே அவர்களுடைய குருகுலவாச மாக இன்று அறியப்படுகிறது.
கிட்டப்பா பிள்ளை வஞ்சனையில்லாமல் வழங்கிய கலைக் கொடையும் நர்த்தகி, சக்தியிடம் இயல்பாகவே அமைந்திருந்த பக்தியும் அவர்களைச் சமூகத்தின் களைகளாக மாறாமல் காப்பாற்றியதுடன் மிக உயர்ந்த கலைஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நர்த்தகி மட்டுமே நடனக் கலைஞராக அங்கீகாரம் பெற்றாலும் சக்தி அவரது ஒப்பனை, அலங்காரம் வழிகாட்டல், விமர்சனம் அனைத்திலும் கலந்து நிற்கும் துணையாக விளங்குகிறார். மீடியா இன்று நர்த்தகியைக் கலைஞர் என்ற முறையிலேயே வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்…
‘’இன்னமும் எங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தர யாருமே யோசிக்கிறார்கள். கற்பகாம்பாள் அருகே, கலை மையங்கள் சூழ மயிலாப்பூரில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நன்கு தெரிந்தவர்கள்கூட வீடு தர நாசூக்காக மறுக்கிறார்கள்- பொய்க் காரணங்கள் சொல்கிறார்கள். சமுதாய அங்கீகாரமும் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் பெற்ற எங்களுக்கே இந்த கதி என்றால் திருநங்கைக் கூட்டத்தின் இதர சகோதரிகளுடைய கதி என்ன…?
பசியின் கொடுமைதான் அவர்களை அலங்கோலத்தில் தள்ளுகிறது என்பதை சமுதாயம் மறந்துவிடுகிறது. சிறு வயதில் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்புக் கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படிப்பட்டக் கூட்டத்தில் போய் விழப்போகிறார்கள்? புறக்கணிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று திரண்டால் நிகழக்கூடிய விபரீதம்தான் திருநங்கைக் கூட்டத்தினருக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்தையை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. ஆனால் இனியேனும் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.
தீராநோயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மட்டும் திருநங்கைகள் மீது அரசும் என்.ஜி.ஓ.க் களும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தக் கவனம், வளர்ந்து விபசார வலைக்குள் சிக்கிவிட்டவர்கள் மீது மட்டுமே விழும்.
விவரம் புரியாத வயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தையும், புரிந்துகொள்ள முடியாமல், பெற்ற தாய் உள்பட அனைவரின் புறக்கணிப்பையும் சமாளிக்க முடியாமல் உடைந்து சிதறும் இளம் திருநங்கைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்..?
முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். இந்தக் குழந்தைகளும் இறைவனின், இயற்கையின் சிருஷ்டி என்கிற உணர்வு பலத்தைக் கொடுங்கள். பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெரும்பாலும் அவர்கள்தான் முதலில் அடையாளம் காண்பார்கள். பெற்ற தாய் கூட ஆண் பிள்ளை என்பதாகவே கொண்டு, பெண்குழந்தைக்குத் தரக்கூடிய கவனத்தைத் தரமாட்டாள். ஆனால், அந்தப் பருவத்தில் திருநங்கைகளுக்குப் பெண்மையின் அரவணைப்பும் பாதுகாப்புமே ரொம்ப தேவைப்படுகின்றன. ஆண் உலகம் அவர்களை அச்சுறுத்தி சீண்டுகிறது.
இதெல்லாம் எப்போது, எப்படி மாறும் என்று யோசித்து மலைத்துப் போய் விடக்கூடாது. அரசு ஜி.ஓ.க்களும் விதிகளும் வெறும் புள்ளிகள்தான். அவற்றைப் பயன்படுத்தித் தப்பில்லாமல் கோலம் போட வேண்டியது சமுதாயம்தான். பொதுவாக எந்த மாற்றமும் அடிமட்ட மனிதர்களிடையே நிகழவேண்டும் என்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் மனமாற்றம் மேல்தட்டு மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செல்வச் சீமான்கள் வீட்டுத் திருநங்கைகளுக்குக்கூட இன்று ஏழைகளின் குடிசைகளில்தான் இடமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அந்த அங்கீகாரம் ஆரோக்கியமானதாக எப்போதும் இருப்பதில்லை என்பதுதான் கொடுமை. ஆனால் அருவருப்போடு அடித்துவிரட்டாத இடத்தில் தானே திருநங்கைகள் அடைக்கலம் தேட முடியும்… இதை மாற்றுவதும் திருநங்கைகளை உயர்த்துவதும் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.’’
திருத்தமாகப் பேசி முடிகிறார் நர்த்தகி. அவர் நாட்டியத்தின் அசைவுகளிலும் கை முத்திரைகளிலும் காணக்கூடிய திருத்தம் அவர் சிந்தனையில் பளிச்சிடுகிறது. நடனத்தின்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் சத்திய ஒளி அவர் சொற்களிலும் வீசுகிறது.
– சீதா ரவி, சுகந்தி ஜி.பாரதி
படங்கள் : ஸ்ரீஹரி
– சஞ்சயன்
————————————————————————————–
From Thozhi.com
திருநங்கையர் நர்த்தகி நடராஜன், சக்தி பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்வு திருநங்கையரின் உலகை அறிமுகப்படுத்தியது
– ந. கவிதா
கோவையில் மாதந்தோறும் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திவந்த ‘அற்றைத்திங்கள்’ நிகழ்ச்சி இந்த மாதத்திலிருந்து சென்னையில் நடைபெறுகிறது. 29.04.07 அன்று இந்நிகழ்வின் முதல் கூட்டம் புக்பாயிண்டில் தொடங்கியது. இதில் திருநங்கையர் நர்த்தகி நடராஜும் சக்தி பாஸ்கரும் கலந்துகொண்டு உரையாடினர்.
தமக்குள் உணர்ந்த பெண்மையை உன்னதமெனக் கொண்டாடி, அந்தப் பெண்மையை வெளிப்படுத்தும் வடிகாலாக நடனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட திருநங்கையர் இவர்கள்.
பால்திரிபு நிலை, சமூகத்தின் ஏளனத்தையும் குடும்பத்தின் புறக்கணிப்பையும் தந்த நிலையிலும் துயரங்களைக் கடந்து லட்சியப் பயணத்தை மேற்கொண்ட இத்திருநங்கையரின் உரையாடல் அவர்களது வேதனைகளைவிட அவர்கள் அடைந்துவிட்ட இலக்கின் மனநிறைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆளற்ற மைதானமும் மரங்கள் சூழ்ந்த கண்மாய்க் கரையும், பழைய கோயில் மண்டபங்களும் இவர்களின் நடனத்தையும் அற்புதமான கனவுலகத்தையும் கண்டுகொள்ளும் அரங்குகளாக இருந்தன. கீற்றுக் கொட்டகையில் கடைசி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுத் திண்ணையில் உறங்கிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர்களின் ஆதர்ச நாட்டியக்காரர்களாக பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் இருந்தனர்.
விளையாட்டிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நர்த்தகிக்கு, அவரைப் போலவே புறக்கணிப்பிற்குள்ளான சக்தி தோழியாகக் கிடைத்தார். இவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் தனி உலகில், பாகுபாடு காட்டாத மனிதர்களும் பசித்தவர்களு்கு எப்போதும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்த இவர்களது வளமிக்க வீடும் இருந்தன.
முகபாவத்திலும் ஒப்பனை செய்யும் ஆர்வத்திலும் நடனத்திலும் இவர்களுக்கு இருந்த அளவில்லாக் காதல், குடும்பத்தினரின் வெறுப்பிற்கு இவர்களை ஆளாக்கியது. இது நர்த்தகியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்தபோது, வசதியான வீட்டில் வாழ்ந்த சக்தியும் அவருக்காக ஊரைவிட்டு வெளியேறினார். பல விதமான துயரங்களுக்குப் பிறகு, வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.
பால்திரிபையும் வறுமையையும் பொருட்படுத்தாமல், வைரங்களைக் கொட்டித் தரும் மாணவிகளைப் போலவே இவர்களையும் பயிற்றுவித்த தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை, தஞ்சை நால்வரின் மார்க்கங்களைக் கற்றுத் தந்தார். நர்த்தகி ஒரே ஆண்டில் ஆறு வருடங்களில் முடிக்க வேண்டிய நடன மார்க்கங்களைக் கற்று, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
‘எல்லா வேதனைகளின்போதும் ஏமாற்றங்களின்போதும் தாயாக, தோழியாக என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி பாஸ்கர்தான் காதலிலும் காமத்திலும் நான் சிக்கிவிடாதபடி வழிகாட்டி இன்றைய என் சாதனையை எட்டச் செய்தவள்’ என்றார் நர்த்தகி. சக்திதான் தனக்கு எல்லா சக்தியும் என்று தன் தோழியைப் பற்றிப் பெருமிதப்படுகிறார் அவர்.
நர்த்தகி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் நான்கு ஆண்டுகள் விரிவுரையாளர், மத்திய அரசின் மானியத்தை இருமுறை பெற்றவர். தற்போது இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.
சக்தி பாஸ்கர் இந்த உரையாடலில் மிகக் குறைவாகவே பேசினார். இருந்தாலும் சில வார்த்தைகளில் அரவாணிகளின் வாழ்வியல் துயரைப் புரியவைத்தார். அரவாணிகளைப் பொறுத்தவரை காதல் ஏமாற்றம் தரும் விஷயம் என்றார் அவர். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் பெரும்பான்மையினரின் வாழ்க்கையாக இருக்கும் சூழலில், லட்சியங்களை அடைய, அளவற்ற சுதந்திரமுள்ள அரவாணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உரையாடலுக்கு முன்பாக, பீஷ்மரைக் கொல்ல சிகண்டியாக உருவெடுத்த அம்பையின் கதையை நடன வடிவமைத்திருந்த நர்த்தகியின் அந்த நடனக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவரது நடனத்தில் எழுச்சியும் உணர்வுகளும் மிக்க முகபாவங்கள் அழகுற அமைந்திருந்தன.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும் நடன வகைகளுள் ‘வீழ்ந்தாடல்’ எனும் வகை ‘பேடியாட’லைக் குறிப்பதுதான் என்று சொன்ன நர்த்தகியின் பேச்சு மிகுந்த புலமையோடு வெளிப்பட்டது. இறப்பதற்குள் ஒரு அரவாணியைத் தனக்குப் பின் உருவாக்குவதே தன் ஆசை என்றார் நர்த்தகி. நிகழ்விற்கு நூறு பேர்தான் வந்திருப்பார்கள் என்றாலும் அரங்கம் அவரது உரையில் கட்டுண்டிருந்தது என்று சொல்லலாம்.
பிறகு நர்த்தகி, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். இறுதியாக எழுத்தாளர் தேவிபாரதி நன்றி கூறினார்.