300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை
பா. ஜெகதீசன்
99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது
சென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.
தற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.
300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.
வரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.
24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.
பிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.
ஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.
அதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.
ஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.
தற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்
சென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.
திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.
தி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.
மாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:
- திமுக- 90,
- காங்கிரஸ் -38,
- பாமக -17,
- அதிமுக -4,
- இந்திய கம்யூனிஸ்ட் -2,
- விடுதலைச் சிறுத்தைகள் -2,
- மதிமுக -1,
- பகுஜன் சமாஜ் -1.
தற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
ராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:
- திமுக-36,
- காங்கிரஸ்-13,
- பாமக- 4,
- சுயேச்சை -1,
- காலியிடங்கள் -2
முக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.
மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.