விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்
சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.
“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.
வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.
“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.
குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.
மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.
——————————————————————————————————————-
குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்
எம். மார்க் நெல்சன்

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.
சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.
ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.
சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.
இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.
இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.
ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.
ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.
பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.
ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.
ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.