ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருப்பை கட்டிக்குக் கஷாயங்கள்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
கருப்பையில் உள்ள கட்டிகளால் ( Uterine fibroids) அவதிப்படுகிறேன். அவை ஏற்படுவதற்கான காரணங்களையும் நீங்குவதற்கான வழிமுறைகளையும் கூறவும்.
கருப்பை கட்டிகளால் அவதியுறும் பெண்களின் விகிதம் தற்சமயம் கூடியுள்ளது. இதற்குக் காரணமாக அடிக்கடி கருக்கலைப்பு, டி அண்ட் ஸி முறையில் கருப்பையைச் சுத்தம் செய்வதால் ஏற்படும் மறைமுக ரணங்கள், வம்ச பரம்பரை, பெண் வளரும்போது புரதச் சத்து உடல் அணுக்களில் ஏற்படுத்தும் விரிவாக்கம், கருப்பையைச் சூழ்ந்துள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் உபாதைகள், கருப்பையின் வேலைத் திறனை செவ்வனே செய்யும் அபான வாயு சீற்றம் அடைதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஐம்பது சதவீதம் பெண்கள் இந்தக் கருப்பைக் கட்டிகளால் பாதிப்படைந்தாலும் பலருக்கும் அதனால் உபாதை ஒன்றும் ஏற்படாததால் அவை இருப்பதைப் பற்றியே அவர்கள் அறிவதில்லை.
கட்டியின் அளவு, கருப்பையில் அது வந்துள்ள இடம், மற்ற உறுப்புகளின் அருகாமை ஆகியவற்றைப் பொருத்து அறிகுறிகளை ஏற்படுத்தும். அடிவயிற்றில் அழுத்தம், வலி, சிறுநீர்ப்பை அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் அல்லது தடையுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம், மலப்பை அழுத்தத்தால் மலம் கழிக்கையில் வலி, அதிக அளவில் உதிரப்போக்கு, அதிகமான ரத்தக் கசிவினால் இரும்புச் சத்து குறைந்து ரத்தசோகை, கருத்தரிக்க இயலாத நிலை போன்றவை ஏற்படும்.
இந்தக் கட்டிகள் தொல்லைகள் ஏதும் தராதிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் சிலவகைக் கட்டிகள் உபாதை ஏதும் ஏற்படுத்தாதிருந்தாலும் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க வேண்டிவரும். அல்லது அவற்றை ஸ்கேன் மூலம் அடிக்கடி கவனிக்க வேண்டும். காரணம் இந்தக் கட்டிகள் திடீரென்று அசுர வளர்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது. அல்ட்ரா சவுண்ட் மூலம் இந்தக் கட்டிகளைப் பற்றிய விவரங்களை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துவிடுவதால் இந்தக் கட்டிகளும் அகற்றப்படுகின்றன. கட்டிகளை மட்டும் நீக்கும் Myomectomy முறையும் லேசர் மூலம் கட்டிகளைத் துளைப்பதும், கட்டிகளை உறைய வைத்துவிடும் Cryosurgery, பாலிவினைல் ஆல்கஹாலை சிறிய குழாய்மூலம் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு அடைப்பை ஏற்படுத்தி அவற்றை பட்டினிப் போடச் செய்யும் Uterine artery occlusion எனும் கருப்பை ரத்தக்குழாய்களை அடைக்கும் முறையும் தற்சமயம் நவீன மருத்துவத்தில் கையாளப்படுகின்றன.
கருப்பை கட்டிகள் உருவாகும் முறையை ஆயுர்வேதம் கூறும் முறையானது நவீன மருத்துவத்தின் கூற்றிலிருந்து வேறுபடுகிறது. கருப்பையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபான வாயு- வேர்க்கடலை, காராமணி, மொச்சைக் கொட்டை, பட்டாணி, பச்சைப் பயிறு, கடலை எண்ணெய், அதிக நேரம் பட்டினியிருத்தல் போன்ற உணவு மற்றும் செய்கையால் சீற்றம் அடைகிறது. பகல்தூக்கம், சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும் கபத்தின் சீற்றமும் அதனுடன் சேர்வதால் கருப்பையின் உள்ளே அமைந்துள்ள ரத்த நாளங்கள், மாமிசம் மற்றும் கொழுப்புப் பகுதிகள் கேடடைந்து கட்டிகளை உருவாக்குகிறது.
அடிவயிற்றுப் பகுதியில் கட்டிகளின் இறுக்கம் தளர புளித்த சூடான மோரில் சில மூலிகைப் பொடிகளைக் குழைத்துப் பற்று இடுவார்கள். அதன் மூலம் ஏற்படும் உட்புழுக்கம் காரணமாக இறுகி கெட்டியாயிருந்த கட்டிகள் தளர்ந்து தொய்வை அடைகின்றன. அதன்பிறகு உள் மருந்தாகக் காலையில் வெறும் வயிற்றில் வரணாதி கஷாயமும் மாலையில் சுகுமாரம் கஷாயமும் சாப்பிட, இந்தக் கட்டிகள் உடைந்து அமுங்கிவிடும். இன்றைய நவீன அறுவைச் சிகிச்சை முறைகளும் மிகச் சிறப்பான முறையில் வந்திருப்பதால் மருந்தின் மூலம் குணமடையாத கட்டிகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றுவதில் தவறேதுமில்லை.