Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Curfew’ Category

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Accident triggers riots, curfew in Taj Mahal city of Agra: Truck crushes four

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

ஆக்ராவில் வன்முறை

வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்
வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் புதன்கிழமை காலை, நான்கு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஷபே –பராத் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியபோது, நான்கு இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்புப் படை வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அத்துடன், போலீசார் மீது சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். சில தொழிற்சாலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில்தான் உள்ளது. அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

——————————————————————————————-

லாரி மோதி 4 இளைஞர்கள் இறந்ததால் ஆக்ராவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு

ஆக்ரா, ஆக.30: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை லாரி மோதி இறந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 12 லாரிகள் உள்பட 22 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.

நகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இறந்த 4 இளைஞர்கள்: சுபாஷ் பூங்கா பகுதி அருகே 4 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் இறந்தனர். சந்த், கம்ரான், வாஸிம், வாஹித் ஆகியோர் அந்த இளைஞர்கள். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் நடத்திய தாக்குதல் வன்முறையில் முடிந்தது.

வன்முறையாளர்கள் கடைகளுக்குத் தீ வைத்தனர். இரண்டு ஆலைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் போலீஸ், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும்.

5 அதிகாரிகள் உள்பட 50 போலீஸôர் காயம்: வன்முறையாளர்கள் தாக்குதலில் 50 போலீஸôர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் ஒன்றில் புகுந்த கும்பல் போலீஸôரை தாக்க முயன்றது.

வன்முறை கும்பலைக் கலைக்க வானை நோக்கி போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பட்டதில் ஒருவர் இறந்தார். போலீஸ் தடியடி பிரயோகம் செய்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

மதுரா, அலிகார், பெரோஸôபாத் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். ஆக்ராவில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அவதி: சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்கி யுள்ளனர். அந்தப் பகுதியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் வருகிறது. ஹோட்டலை விட்டு தாங்கள் குறிப்பிடும் வரை வெளியே வர வேண்டாம் என்று போலீஸôர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

நஷ்டஈடு: வன்முறை சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

“விபத்தில் நான்கு இளைஞர்கள் இறந்த சம்பவத்துக்கு போக்குவரத்து நிர்வாக குறைபாடே காரணம். கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட லாரி வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்’ என்று உள்துறை உயரதிகாரி ஜே.என்.சேம்பர் லக்னௌவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நகர நிர்வாகம் மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அமைதி காக்குமாறு மதத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Posted in Accident, Agra, Aligar, Aligarh, Curfew, Ferozabad, Ferozebad, Hindu, Hinduism, Islam, Lorry, Madhura, Madura, Muslim, Politics, Religion, riots, Taj, Truck, UP, Violence | Leave a Comment »

Maoists in south Nepal gun battle

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நேபாள மோதலில் 5 பேர் பலி

மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்
மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.

காவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

தனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.

 

=======================================================

நேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன

காத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

வருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.

இதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

=======================================================

நேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு

காத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

கிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.

தக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.

இந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Posted in battle, Blast, Bomb, Business, Businessman, Clashes, Commerce, Constitution, Curfew, dead, Elections, ethnic, Fighters, Gaur, Government, Hari Shiroda, Hari Shirodha, Hindu, Hinduism, Hotel, Insurgency, Kathmandu, King, Madheshi, Madheshi Janadhikar Forum, Madhesis, magazine, Maoist, Media, MJF, MSM, Nepal, Protest, Rebels, Restaurant, rights, Scare, Strike | 1 Comment »

London Diary – Era Murugan: Fire, Curfew, Floods

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

லண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’!

இரா. முருகன்

“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.

லண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.

லண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.

தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.

பெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.

கிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்டி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.

இப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

பொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.

“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா? அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது? அதெல்லாம் வேலைக்காகாது”

மேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.

நெருப்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.

அந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.

Posted in 1666, Cover Fire, Curfew, England, Era Murugan, Era Murukan, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Plague, Thames, Tour, Tourist, UK | Leave a Comment »