கற்பை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு: கவிஞர் சினேகன் வீட்டில் முற்றுகை போராட்டம்
சென்னை, மார்ச்.16-
பறையர் பேரவை பொதுச் செயலாளர் ஏர்போர்ட் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவிஞர் சினேகன் டைனமிக் திருமணம் என்ற பெயரில் புதுக்கோட்டை கொத்தமங்களம் கிராமத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்ள ஒருவரை முறையே இல்லாமல் புரட்சி சிந்தனை என்ற பெயரில் காமகளியாட்ட கேவலங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார்.
நடிகை குஷ்பு, கற்பு பற்றியும் தமிழக ஆண், பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. அதைவிடமோசமாக தற்போது தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட கவிஞர் சினேகன் இன்று முற்படுகிறார்.
கற்புக்கு இலக்கணம் கண்ட முன்னோடி இனமே தமிழினம்தான். பெண்ணானவள் தானாக தனித்துப் போராடி பெற்ற அவளுக்கு மட்டுமேயான உரிமையே கற்பு என்னும் உரிமை, அதை ஆண் அப்பெண்ணின் மீது திணிக்கவில்லை. ஆய்வுகள் இப்படி இருக்க தமிழர்களின் கற்பு நெறியை கொச்சைப்படுத்தும் விதமாக சினேகன் பேச்சும் பேட்டிகளும் அமைந்துள்ளன.
கட்டிப்பிடித்து மகிழ்ந்தால் கற்பு பறிபோய் விடுமா? தொடுவதால் கற்பு என்கிற புனிதம் தொலைந்து போய்விடும் எனச் சொன்னால், கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆண்கள் ஒருத்திக்கு ஒருவனனாக இருக்கிறார்கள்? என ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.
திரைப்படங்களில் பாடல்கள் எழுதும்போது பெண்களை பாலியல் வக்கிரங்களாய் உருவகப்படுத்தி, சின்னவீடா வரட்டுமா? பெரியவீடா வரட்டுமா? கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா? என இளைஞர்களை தவறான பாதையில் திசை திருப்புவது போல பாடல் எழுதிவரும் கவிஞர் சினேகன் போன்ற பன்னாட்டு உலகமயமாக்கல் ஏஜென்டுகளாய் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.
வரும் 22.03.07 அன்று காலை 11.00 மணிக்கு பறையர் பேரவை சார்பில் 100 இளைஞர்கள், கோயம்பேடு வணிகவளாகம் அருகில் வெங்கடேசுவரா பிரதான சாலை, விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டிற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.