7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லையாம். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்களாம்.
உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு சம்பளத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் கூட இந்தியர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சரி, வீரர்களும் சரி நடந்து கொள்வதில்லை (நடந்து கொள்ளப் போவதும் இல்லை).
இந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரவில்லையாம். கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளதாம்.
இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.
சம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும்.
ஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல என்றார்.
சம்பளப் பாக்கி குறித்து வீரர்களிடையே அதிருப்தி நிலவினாலும் கூட உலகக் கோப்பைப் போட்டியில் கேவலமாக ஆடி விட்டுத் திரும்பியுள்ளால் சத்தம் போட்டு கேட்க தயங்கிக் கொண்டிருக்கின்றனராம்.
இதற்கிடையே, வங்கதேச டூருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்பு வரை வீரர்களை தர வாரியாகப் பிரித்து ஆளுக்கு ஒரு சம்பளத்தைக் கொடுத்து வந்தது வாரியம்.
அதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக் போன்றோருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூ. 35, ரூ. 29 லட்சம் என சம்பளம் தரப்பட்டது.
இப்போது அதை அப்படியே மாற்றி விட்டு புதிதாக ஒரு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் இந்திய வீரர்கள் கையெழுத்திடவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்துக்குப் பின்னரே இது கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
எனவே வங்கதேச டூரில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர போனஸ், போட்டிக்கான கட்டணம் தனியாம். போட்டியில் வெற்றி பெற்றால் போனஸ் தரப்படும். தொடரை வென்றால் இன்னொரு போனஸ் உண்டாம்.