தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பணிக்குழு
சென்னை, நவ. 14: தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்.ஐ.டி.எஸ்.) தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவராக எஸ்.ஆர்.எம். பல்கலை. இயக்குநர் மு.பொன்னவைக்கோ உள்ளார்.
இதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:
- ம. இராஜேந்திரன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை),
- என்.பாலகிருஷ்ணன் (இணை இயக்குநர், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்),
- ஏ.மோகன் (இணை இயக்குநர், தேசிய தகவல் தொழில்நுட்ப மையம், சென்னை),
- விஞ்ஞானி சுவரண் லதா (மத்திய தகவல்தொடர்புத் துறை),
- எஸ். ராமகிருஷ்ணன் (செயல் இயக்குநர், சி.டி.ஏ.சி., புனே),
- எம்.என். கூப்பர் (மாடுலர் இன்ஃபோடெக், புனே),
- பி.செல்லப்பன்,
- மா. ஆண்டோ பீட்டர் (இருவரும் கணித்தமிழ்ச் சங்கம்),
- வி.கிருஷ்ணமூர்த்தி (கிரெசன்ட் பொறியியல் கல்லூரி),
- என்.அன்பரசன் (ஆப்பிள்சாஃப்ட், பெங்களூர்).
இவர்களுடன், வெளிநாட்டில் வசிக்கும்
- மணி. மணிவண்ணன் (கலிபோர்னியா, யு.எஸ்.),
- கே.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து),
- கலைமணி (சிங்கப்பூர்) ஆகிய வெளிநாட்டவரும் இடம்பெற்றுள்ளனர்.
கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளை இடம்பெறச் செய்ய “8 பிட்’ எனப்படும் இட அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக, “16 பிட்’ இட அளவை ஒதுக்கவேண்டும் என்று தமிழ் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். தற்போது ஆங்கில எழுத்துகள் அவ்வாறு உள்ளன. இந்த விரிவாக்க முறை தமிழுக்கும் செயல்படுத்தப்பட்டால், கணினியில் தமிழை வெகு விரைவாகப் பயன்படுத்த இயலும்.
இது தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அண்ணா பலைகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்ள ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது.
இத்தகவலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.