தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை
‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.
தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.
இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.
தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.
கட்டணம் உயர்வு?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.
மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.