சேவை: ஏழை மாணவர்களுக்கு உதவும் இணையதளம்!
எம். ரமேஷ்
ஒருவரால் ஒரு லட்சம் பேரைப் படிக்க வைக்க முடியுமா? இப்படிக் கேட்டால், இது என்ன “முதல்வன்’ ஸ்டைல் ஒரு நாள் முதல்வர் மாதிரியான கேள்வியாக இருக்கிறது என்று தோன்றும். இல்லையெனில் டாடா, பிர்லா ரேஞ்சில் உள்ளவரால் சாத்தியம் எனத் தோன்றும். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த
திருவேங்கடம் கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இளங்குமரன், தன்னால் சாத்தியம் என்று ஆணித் தரமாகக் கூறுகிறார்.
இவர் கூறியதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. ஆனால் அவரிடமிருந்த உறுதி, அவரது அலுவலகத்திற்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
வள்ளுவர் கோட்டம் அருகே மாடியில் அமைந்திருந்த அந்த அலுவலகத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமப்படத்தான் வேண்டியிருந்தது. கீழே இரு சக்கர வாகன பழுது பார்க்கும் இடம். பக்கத்தில் சிறிய சந்தின் உள்ளே முதல் தளத்தில் அமைந்துள்ளது ஆப்பிள் ஜி வெப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் அலுவலகம். சாஃப்ட்வேர் அலுவலகத்துக்கு உண்டான “பந்தா’ ஏதுமின்றி சாதாரண அலுவலகம் போலக் காட்சியளித்தது.
17 பேர் பணியாற்றும் அலுவலகம் என்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. அவரவர், கம்ப்யூட்டர் முன்பு தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு லட்சம் மாணவர்களைப் படிக்க வைப்பது எப்படி, பள்ளி ஆசிரியர் கூட தமது பணிக்காலம் முடியும் வரை ஒரு லட்சம் மாணவர்களை உருவாக்க முடியாதே? என்ற வினாவுடன் அறைக்குள் நுழைந்த நம்மை வரவேற்று, தனது அறையில் இருந்த கம்ப்யூட்டரை இயக்கியவாறே பேசத் தொடங்கினார் இளங்குமரன்.
மெக்கானிக்கலில் பட்டயம் பெற்று பின்னர் பிபிஏ மற்றும் எம்பிஏ படிப்பை அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்று பின்னர் கம்ப்யூட்டரில் கிராஃபிக்ஸ், வெப் டிசைன் படித்ததுதான் தனது படிப்பின் பின்புலம் என்றார்.
“”கிராஃபிக்ஸ், வெப் டிசைன் படிப்பு வேலை தர, அதுவே பிடித்துப் போய் அதில் நாட்டம் அதிகமானது. ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அசெம்பிள் செய்யலாம் என்ற எண்ணத்தில் சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு முறுக்கு விற்பனை செய்த சிறுவன் தன்னிடம் முறுக்கு வாங்கும்படி கெஞ்சினான். சிறிய வயதில் வேலைக்கு வந்துள்ளாயே என்று கேட்டதற்கு, படிப்பதற்காக வேலை பார்ப்பதாகக் கூறினான். உடனே அவனது படிப்புக்கான செலவை ஏற்பதாகக் கூறினேன். அவனும் அதை ஏற்று முறுக்கு விற்பதை விட்டான். அடுத்த ஆண்டு, தன்னுடன் இன்னொரு மாணவனை அழைத்து வந்து, அவனும் படிப்பதற்கு வசதியின்றி இருப்பதாக் கூறினான். இருவருக்கும் உதவிக் கரம் நீட்டினேன். அடுத்த ஆண்டு அந்த இருவரோடு மேலும் இருவர் உதவி கேட்டு வந்தனர் .
மாதச் சம்பளத்தில், நான்கு பேருக்கு கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்த முடிந்தது. இவர்களைப் போன்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்ற தேடல் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
சில நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் ஜி வெப் என்ற நிறுவனத்தை தொடங்கி, சில நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் வடிவமைத்துத் தர அதில் ஓரளவு வருவாய் கிடைத்தது.
வருமானத்தை மாணவர்களுக்கு உபயோகமான வழியில் பயன்படுத்தினால் என்ன எண்ணத்தைச் செயல்படுத்தியதில் உருவானதுதான் www.worldcolleges.info எனும் இணையதளம். ஏறக்குறைய நான்கு ஆண்டுகால உழைப்பில் தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது இந்த இணையதளம்.
இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், அதில் உள்ள படிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இதில் கிடைக்கும்.
பொதுவாக ஏழை மாணவர்கள் புத்தகம் வாங்குவதற்கு வசதியில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் தங்களது புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக இலவசமாக அளிக்கின்றன. அத்தகைய புத்தகங்கள் எந்தெந்த இணையதளத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இதில் உள்ளன.
ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தங்களைப் பற்றிய தகவலை இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், வசதி படைத்தோர் உதவி செய்ய முன்வருவர். அதேபோல எந்தெந்த கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்ற தகவலும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒரே சமயத்தில் உலகெங்கும் உள்ள ஒரு லட்சம் மாணவர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிட முடியும்.
இந்த இணையதளத்துடன் இணைந்த பல்வேறு இணைய தள முகவரிகள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. எனவே மாணவர்கள் கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் இதில் பெறலாம்.
மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், தினசரி அப்டேட் செய்யப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவும் இதில் வசதி உள்ளது என்றார் இளங்குமரன்.”
தினசரி உலகின் எந்தெந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிடுகின்றனர் என்பதைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அலுவலகத்தில் உருவாக்கியிருந்தார். இந்தியாவில் மட்டும் தினசரி ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்வரை இந்த இணையதளத்தைப் பார்வையிடுகின்றனர் என்பதற்கான தகவலை நம் கண்முன்னே காட்டினார். அதைப் போல உலகின் பிற பகுதிகளில் யார் பார்க்கின்றனர் என்பதையும் கம்ப்யூட்டரில் காட்டியதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.
சுட்டுவிரல் அசைவில் உபயோகமான தகவலை குறிப்பாக மாணவர்கள் பெற www.worldeducation.com என்ற தளத்துக்குச் செல்லலாமே!