Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Couplets’ Category

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »