தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
ஆர். நடராஜ்
ஆண்டு 1860. ஆகஸ்ட் 17-ம் நாள்.
இது இந்திய காவல் துறை சரித்திரத்தில் மிக முக்கியமான நாள். அன்றுதான் முதல் போலீஸ் கமிஷன் எம்.எச். கோர்ட் தலைமையில் அப்போதைய மதராஸ் காவல் துறைத் தலைவர் டபிள்யூ. ராபின்ஸன் உள்ளிட்ட ஆறு நபர் குழாம் அமைக்கப்பட்டது.
இந்தக் கமிஷனின் பரிந்துரையின் பேரில் இந்திய காவல் சட்டம் 1861 இயற்றப்பட்டது. இது இந்தியாவில் உள்ள காவல் துறை அமைப்பை இன்றுவரை நிர்ணயிக்கும் சட்டம்.
இந்தச் சட்டத்துக்கு அடித்தளம் 1859-ல் இயற்றப்பட்ட மதறாஸ் சட்டம் 27 – இது அப்போதிருந்த மதறாஸ் மாகாணத்தின் காவல் துறை அமைப்பை நிர்ணயித்தது. இந்தச் சட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது 1856ல் இயற்றப்பட்ட சென்னை மாநகர காவல் அமைப்புச் சட்டம்.
ஆம், சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1856 பின்பு வளர்ந்த காவல் அமைப்புகளுக்கு வழிகாட்டி என்பதுதான் உண்மை.
1856 சென்னை நகர காவல் சட்டப்படி போல்டர்சன் முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்றார். குற்றவியல் நீதித்துறை தலைவர் அந்தஸ்து அவருக்குத் தரப்பட்டது.
1856 முதல் சுதந்திரமாகச் செயல்பட்ட நகர காவல் துறை, 1867ல் மாகாண காவல் துறைத் தலைவர் ஆளுமையில் கொண்டு வரப்பட்டு, பின்பு 1887 முதல் கைல்ஸ் குழுவின் பரிந்துரையின் பேரில் தனிப்பிரிவாக அரசின் பிரத்தியேக அதிகாரத்தின் கீழ் செயல்பட்டது.
1902 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட போலீஸ் கமிஷன், சென்னை, மும்பை, கோல்கத்தா நகரங்கள் மற்றும் மாகாணங்களில் செயல்பட்ட காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்து காவல் துறை சீரமைப்புத் திட்டத்தை வகுத்தது. அதன்படி மீண்டும் மாநகர காவல் துறை மாகாணத்தின் காவல் துறையின் ஆளுமையின்கீழ் கொண்டு வரப்பட்டது.
1886ஆம் ஆண்டு சென்னை “மக்கள் பூங்கா’வில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரிய பொருள்காட்சி இந்த மைதானத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் 372 பேர் உயிரிழந்தனர்.
இம்மாதிரி மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக அதிக காவலர்கள் தேவைப்பட்டதால், அண்டை மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். “மொஹரம்’ சமயச் சடங்குகள் சமயத்தில் சென்னையில் அடிக்கடி சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இதைக் கருதி “சேமைப்படை’ உருவாக்கப்பட்டது. “மாகாண சேமைப்படை’யும் நிறுவப்பட்டது.
மேற்கூறிய தீவிபத்து மற்றும் அசாதாரணமாக நிகழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1888 அமலாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் சென்னை நகர காவல் துறை இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் பணி என்பதை கருத்தில்கொண்டு இம்மாதிரி கேளிக்கை இடங்களுக்கு ஆணையாளரிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
விபசாரம் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது இன்றைய நிலை. ஆனால் அன்று இது ஒரு சமூகத்தில் உறைந்துள்ள தீயொழுக்கம் என்று கருதப்பட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில் 620 அங்கீகரிக்கப்பட்ட விலை மாதர்கள் இருந்தனர். உரிமம் பெற்ற 237 சாராயக் கடைகளும், 343 கள்ளுக்கடைகளும், 139 போதைப் பொருள்கள் விற்பனை இடங்களும் இருந்தன என்பது அப்போது இருந்த சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறது.
1946ல் இருந்து சென்னை மாநகர விரிவாக்கம் தொடங்கப்பட்டு, புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து படிப்படியாக இணைக்கப்பட்டன.
2005ல் சென்னை நகரத்தின் பரிணாம வளர்ச்சியைச் சமாளிக்க சென்னைப் பெருநகர காவல் துறை உருவாக்கப்பட்டு, மேலும் பல புறநகர்ப் பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டன. இன்று 121 காவல் நிலையங்கள் மற்றும் 34 மகளிர் காவல் நிலையங்களும் இயங்குகின்றன. சென்னை துறைமுகப் பாதுகாப்புக்காக பிரத்தியேக மிதக்கும் கடலோர காவல் நிலையம் இயங்குவது இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் என்பது சென்னை மாநகர காவல் துறையின் மற்றொரு சிறப்பு.
சென்னை ஆணையாளராக முதலில் பதவி பெற்றவர் போல்டர்சன். பராங்குசம் நாயுடு முதல் இந்தியராக இந்தப் பதவியை அலங்கரித்தவர்.
சமீபகாலத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, ரோந்து வண்டிகளுக்கு பூகோள நிர்மாணிப்புக் கருவி பொருத்தப்பட்டு செயல்முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.
சமுதாய காவல்பணி மேலும் மேம்படுத்தப்பட்டு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் சமுதாய காவல்பணி மையங்கள் அமைக்கப்பட்டன.
குற்றத்தடுப்பு நடவடிக்கை, நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்க பிரத்தியேக முயற்சி, மீட்கப்பட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்தல், நடந்த குற்றங்களைத் துரிதமாகப் புலனாய்வு செய்து முடித்தல், போக்குவரத்தை சீரமைத்தல், தானியங்கி சமிஞ்கை நிறுவுதல், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளல், பொதுமக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து மனித நேயத்தோடு தீர்வு காணுதல், குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க சிறார் மன்றங்களை நிறுவுதல் போன்ற பல ஒருங்கிணைந்த பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல சென்னை மாநகர பதினைந்து காவல் நிலையங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் பெறப்பட்டது.
இன்று நவீன மயமாக்குவதில் மேலும் ஒரு மைல்கல், பல தொழில் நுட்ப உபகரணங்கள் கொண்ட ரோந்து வாகனங்கள். இம்மாதிரி 100 ஹூண்டாய் வாகனங்கள் தமிழக முதல்வரால் சென்னை மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இம்மாதிரியான நவீன வாகனங்கள் இல்லை.
காவல் துறையினரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது நேர்மை, கண்ணியம், கடமை உணர்வு, காவல் நிலையங்களில் அனுசரணையான அணுகுமுறை. பாரம்பரிய வளம் பெற்றது தமிழக காவல் துறை. தமிழக காவலர்கள் நல்லொழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. எவ்வளவோ சவால்களையும், சுமைகளையும் கடந்து புடம் போட்ட தங்கமாக மிளிர்வது நமது காவல் துறை. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ஆயிரக்கணக்கான காவலர்களின் வியர்வையில் வளர்ந்தது இந்தத் தல விருட்சம். அதனை மேலும் மேம்படுத்துவது ஒவ்வொரு காவல் துறை ஆளுநரின் கடமை.
சென்னை காவல் துறை, 150-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், காவல் துறைக்கு நற்பணியாற்றிய பல சிகரங்களை எட்டிய பெரியவர்களின் பணிகளை நினைவு கூர்வோம். சமுதாயப் பணிக்காக உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்.
“”நேசமான அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, வெளித் தலையீடுக்கு அடிபணியாதிருத்தல், பரிவோடு நம்பிக்கை வரும் வகையில் நடத்தல், திறமையான உயர்தர ஆளுமை காவல் துறையின் எல்லா மட்டத்திலும் பரிமளித்தல் ஆகிய நல்லியல்புகள் காவல் துறை மேன்மை அடைய இன்றியமையாதவை’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ள அறிவுரைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். இதுவே ஒவ்வொரு காவல் துறையினரின் குறிக்கோளாகவும் அமைய வேண்டும்.
(கட்டுரையாளர்: காவல் துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).