மன்னார்குடி அல்வா!
அல்வா! இந்தப் பெயரைக் கேட்டாலே திருநெல்வேலி ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா புகழ் பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னொரு ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி.
நாள்தோறும் வீதியோரம் அல்வா கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா?! போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்.
மன்னார்குடியில் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. ஊரின் மையமாய் ஒரு நீண்ட வீதி. இந்தக் கடைசியில் ராஜகோபாலசுவாமியும் அந்தக் கடைசியில் கைலாசநாதரும் அருள்பாலிக்கின்றனர். வீதியின் மையப் பகுதியைப் பந்தலடி என்கிறார்கள். “அல்வாவடி’ எனக் கூறலாம். இரு புறமும் உள்ள அல்வா கடைகளில் நின்றுகொண்டே அல்வா சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை இங்கு எப்போதும் பார்க்க முடிகிறது.
அல்வா மேல் நம் மக்களுக்குத்தான் எத்தனைப் பிரியம்? எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது? அது போகட்டும்!
திக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்; ஒவ்வொரு ருசி. இதில், மன்னார்குடி அல்வாவுக்கு அப்படியென்ன விசேஷம் என்றால், அந்தக் காலத்து கோதுமை முந்திரி அல்வா அதே ருசியில் இன்றும் இங்கு கிடைப்பதுதான்.
மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!
அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.
ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.
அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:
“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.
சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.
மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா” என்கிறார் யுவராஜ்.
புறப்படுகையில் ஒரு சின்ன இலையில் அல்வா வைத்துக் கொடுத்த கடைக்காரர்கள் சொன்னார்கள்: “”சாப்பிட்டுக்கொண்டே சந்தோஷமாய் போங்கள். இதுவும் மன்னார்குடி பாணிதான்!”.