உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு
புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.