Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Contributions’ Category

Lamenting the corrupt Political Powers – Uttar Pradesh to Tamil Nadu & its Party Leaders

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கோடிக் கோடி இன்பம் பெறவே…

இரா.சோமசுந்தரம்

“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”

உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு!.

ஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.

இந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்!

தற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.

கட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.

ஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.

“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.

வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா?

“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.

மகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.

வினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.

காமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.

அண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.

இப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.

அரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா? “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா?

ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.

ஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).

Posted in abuse, Anna, BJP, Bribes, Camapign, Contributions, Corruption, Finance, Gandhi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, kickbacks, Law, Mahatma, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, NGO, Order, Politics, Power, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, Pratibha Patil, reforms, Sonia, SP, UP, Vinoba, Vinobha, Yadav | Leave a Comment »

Election Festivals – The Price of Democracy

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

தேர்தல் திருவிழாக்கள்

இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாபோல. எப்படி திருவிழாவுக்குப் பணம் கணக்குவழக்கில்லாமல் செலவழிக்கப்படுமோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஒருசிலர் பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பார்களோ, எப்படி திருவிழாவை முன்னிட்டு ஊரெல்லாம் அலங்கரிக்கப்படுமோ அப்படித்தான் தேர்தலும்.

திருவிழாவில் கடவுள் பெயரால் எல்லா ஆர்ப்பாட்டங்களும் நடக்கும். திருவிழா முடிந்தால் கடவுளை மறந்து விடுவார்கள் லாபம் சம்பாதித்த வியாபாரிகள். அதேபோலத்தான் தேர்தலின்போது, வாக்காளர்களை முன்னிறுத்தி செய்யப்படும் பிரசாரங்கள் ஒருசிலருக்கு வருமானத்தையும் யாராவது ஒருவருக்குப் பதவியையும் கொடுப்பதுடன் முடிந்துவிடும். அதன் பிறகு வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் உள்ள உறவு அடுத்த தேர்தலின்போதுதான்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. விழாக்கோலம் பூண்டிருக்கிறது மதுரை மாநகர் என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. தொகுதியில் பணமழை பெய்கிறது என்று கேள்வி. வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வதாகத் திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் குற்றம்சாட்டுகிறார்கள். இருவருக்குமே இந்த விஷயத்தில் சமபங்கு இருக்கும் போலிருக்கிறது.

1952-ல் நடந்த முதல் தேர்தலுக்கான செலவு வெறும் பத்தரைக் கோடி ரூபாய்தான்.

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

1,300 கோடி ரூபாய்.

அதுவும், கடந்த இருபது ஆண்டுகளில் தேர்தலுக்கான செலவு பத்து மடங்கு அதிகரித்திருப்பதாகத் தேர்தல் கமிஷனின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 1,300 கோடி ரூபாய் என்பது அரசின் நிர்வாகச் செலவு. இது அல்லாமல், வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் கட்சி அனுதாபிகள் செலவழிக்கும் தொகையைக் கூட்டிப் பார்த்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும். அரசியல்வாதிகள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்கிற வகையில் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; சிக்கனமாகத் தேர்தலை நடத்த வேண்டும்; பணமில்லாத, பொதுநல சேவையில் அக்கறையுள்ள வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் – இதுபோன்ற கோரிக்கைகளைக் குறிவைத்து பத்திரிகைத் தலையங்கங்களும் கருத்தரங்குகளும் குரலெழுப்பியதன் விளைவாக, நல்ல பல மாற்றங்களைத் தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் கமிஷனுக்குக் கிடைத்த வஜ்ராயுதம். அதை முனைமழுங்கச் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் 25 லட்சம் ரூபாயும், சட்டமன்றத் தேர்தல் என்றால் 10 லட்சம் ரூபாயும்தான் ஒரு தனிப்பட்ட வேட்பாளர் செலவு செய்யலாம் என்கிற வரன்முறையையும் தேர்தல் கமிஷன் விதித்திருக்கிறது.

பத்து லட்சம்தான் செலவு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி நடந்தால் எந்தவொரு வேட்பாளரும் பஞ்சாயத்துத் தேர்தலில்கூட போட்டிபோட முடியாது என்பதுதான் யதார்த்த நிலைமை. எந்தவித சமூகசேவையும் செய்யாத, தொகுதிக்கே அறிமுகமில்லாத நபர்களை எல்லாம் தலைமைக்கு விசுவாசிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தும்போது, அவர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த 10 லட்ச ரூபாய் எப்படி போதுமானதாக இருக்கும்?

வெளிப்படையான செலவுகள் செய்தால்தானே தேர்தல் கமிஷனின் வரன்முறையை மீறியதாக அமையும். நேராக வாக்காளர்களிடம் பேரம் பேசிவிட்டால்? கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில்விட வாய்ப்புக் கிடைக்கிறது என்பது “போனஸ்’ நன்மை. இதன் வெளிப்பாடுதான் மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காணப்படுவதாகச் சொல்லும் “பணமழை’. பணபலமற்றவர்கள் தேர்தலில் நிற்க வழியே இல்லையா? இல்லை. அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க நமது அரசியல்வாதிகளுக்கு மனமில்லையா?

1,300 கோடி ரூபாய் செலவழித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம். சந்தோஷம்! முறையான ஜனநாயகமாகச் செயல்படுகிறோமா? சந்தேகம்!!

Posted in Analysis, By-election, By-polls, Bye-elections, Campaign, Contributions, Democracy, Donations, Economy, Election, Expenses, Fairs, Festivals, Finance, Freedom, Havala, Hawala, MLA, Money laundering, Moneylaundering, MP, Negative, Op-Ed, Republic, Sivaji, Stats, Tax | Leave a Comment »

Kumudam Theeranathi Interview with Ajay Mehta

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

ஏழைகளுக்கு ஒதுக்கும் நிதியை புத்திசாலிகள் அபகரித்துவிடுகிறார்கள்
அஜய் மேத்தா சந்திப்பு
குமுதம் தீராநதி

சந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன் _ கடற்கரய்

இந்திய அறக்கட்டளை நிறுவனம் இலாப நோக்கமில்லாது, நாட்டுப்பணி செய்து வருகிறது. இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல் இயக்குநராக 2001 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருபவர் அஜய் மேத்தா.

இவர் 1990_1999 வரை உதய்ப்பூரில் உள்ள ‘சேவா மந்திர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியவர். இந்தத் தொண்டு நிறுவனம் நாட்டுப்புற ஏழைமக்களுக்கு அனைத்து துறையிலும் மேம்பட உதவி செய்து வருகிறது. இன்று அது உலகளாவிய கவனத்தைப் பெற்று இருக்கிறது.

இப்படி தொண்டு செய்வதில் ஏற்படும் ஊழல் குறித்த விஷயங்களை ஆராய்ந்து பேசி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க முயல்பவர் இவர் சமீபத்தில் சென்னையிலுள்ள தேசிய நாட்டுப்புற உதவி மையத்தில் ஒரு உரை நிகழ்த்த வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.

தீராநதி: பெரும்பாலனவர்கள் தர்மம் செய்கிறோம் என்ற மனோபாவத்தை ஒட்டியே தான தர்மங்களை செய்கிறார்கள். சிலர் இது நம்முடைய தார்மீக அறக்கடமை என்ற நோக்கிலும் செய்கிறார்கள் எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார ஆதாயம் பெறுவதற்காக, அறக்கொடைகள் என்ற போர்வையில் கொடுக்கிறார்கள். உங்கள் பார்வையில் இவையெல்லாம் எப்படிபடுகிறது? நீங்கள் எப்படி இந்த நிதியுதவிகளை பார்க்கிறீர்கள். உங்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் நீண்டகாலம் அனுபவம் இருக்கிறது. உங்கள் அனுபவம், சிந்தனையை … பகிர்ந்து கொள்ள முடியுமா?

அஜய்மேத்தா : இந்தியாவில் தர்ம காரியங்கள் செயல்படுவதற்கான தூண்டுகோல்கள்; நோக்கங்கள் பலவாகும், இதுதான் என்று பிரித்துக் காட்ட முடியாது. நீங்கள் சொன்னவைக்குள் அனைத்துமே இருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, காந்தி தன் ஆளுமையினால் பல செல்வந்தர்களை தர்மகாரியங்களில் ஈடுபட வைத்தார்; அவர்களின் மனசாட்சியை எழுப்ப அது வல்லதாய் இருந்தது. மகாத்மா காந்தியின் நடத்தை அவர்கள் தர்மம் செய்வதாக எண்ணாமல் தம் சமூகக் கடமை இது என உணரும்படிச் செய்தார் அவர் வகுத்தளித்த ‘தர்மகர்த்தா கோட்பாடு’ ஒரு தீர்க்கதரிசியின் தொலைநோக்குப் பார்வையாகும். அது மரபாக வளராமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டியதாகும். அந்தக் காலத்திய பெரும் பணக்கார வணிகர்களின் அறவுணர்வுகளை எழுப்பி செயல்படச் செய்தது மகாத்மாவின் மேதையாகும். இப்போதுள்ள பெரும் சவால் என்னவெனில், உதவும் எண்ணமுள்ளவர்களிடம் நம்பும்படியாக தன்னார்வ அமைப்புகள் தம் செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் இயங்கவேண்டும். நான், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வருத்தப்படுவது என்னவெனில், கொடையாளர்கள் சமுதாயத்தில் நிலவும் சிக்கலைக் காண மறுக்கிறார்கள். ஏதோ தாங்கள் தர்மம் செய்கிறோம் என எண்ணிவிடுகிறா£கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவு வது; அடித்தட்டு மக்களுக்கு ஏதோ செய்வது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளவும் இல்லை என்பதுதான் என் வருத்தமாகும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும், என்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறோம் என்பதை பத்தியெல்லாம் சிந்திப்பதேயில்லை. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், பெருகிவரும் செலவும் எப்படி ஏழைமக்களுக்கும் போகிறது என்பதில் எந்த உணர்வும் இல்லை, ஏதோ தர்மம் செய்துவிட்டதாகவே எண்ணிவிடுகின்றனர். இந்தப்போக்கு சரியானது அல்ல என்றுதான் சொல்வேன். தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; சிறப்பான பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் இல்லை; பண உதவியோடு நிறுத்தி விடுகின்றனர். எந்தச் சூழலில் மக்கள் சமுதாயம் இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்து கொள்ளுவதில்லை.

தீராநதி: உங்கள் அனுபவத்தின்படி, இந்தியாவில் அறக்கொடை வழங்கக்கூடியவர்களுக்குப் பெரும் சவாலாக முன் நிற்பது என்ன? அறக்கொடை செய்ய விரும்புகிறார்கள்; முன் வருகிறார்கள்; ஆனால் செய்வதற்கு இடையூறாக அல்லது இடர்ப்பாடாக இருப்பது என்ன என்பதை விளங்கச் சொல்லுங்கள்?

அஜய்மேத்தா : நாம் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மக்கள் முன்னேறுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம். சோஷலிசம்; பொருளாதாரத்தை மேம்படுத்த அரசையே ஈடுபடுத்தினோம்; மக்களையே நேரிடையாக பங்கேற்கச் செய்தோம். ஒரு முயற்சிகூட எதிர்பார்த்த முழு வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் ஆக்கபூர்வமாக பங்களித்தது என்பதை மறுக்க முடியாது என்பதும் உண்மைதானே. மக்கள் ஏன் இன்றும் மதிப்புடைய வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதமே நடைபெறவில்லை என்பேன்.

தீராநதி : அனுபவப்படி பெறும் சவாலாக இருப்பது இந்தத் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நம்பகத்தன்மை; கிடைக்கப்பெற்ற நிதிஉதவிகளை முறையாகவோ, எதற்காக அளிக்கப்பட்டதோ அதற்காக செலவழிக்காமல் அமைப்புகள் நடத்துவோர்களே சுருட்டிக் கொள்வதுதானே நடக்கிறது?

அஜய்மேத்தா : நீங்கள் சொன்னது சரிதான்; எதற்காக நிதிஉதவி கிடைக்கப்பெற்றதோ அதற்காக செலவழிக்கப்படவில்லை; முறைகேடாக செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான்; இவையெல்லாம் எப்படி நடக்க முடிந்தது என்பதைப்பற்றி ஆழமாக ஆராயப்படவில்லை. சமுதாயம் இந்தச் சீர்கேடுகளை பொறுத்துக் கொண்டதும் உண்மைதான். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பதும் _ குற்றவாளி யார் என்பதையும் சுட்டுவது மிகவும் கடினமான காரியமாகும். இதற்கு நாமும் அரசும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும். சமுதாயமும் அரசும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறோம். இப்படித் தட்டிக் கேட்கமுடியாத நிலைக்குக் காரணம் என்ன? நாம் ஒவ்வொருவருமே_ அநியாயத்தையும், அக்கிராமத்தையும், எதிர்த்துக் குரல் எழுப்பும் கலாசாரத்தை வளர்க்கத் தவறிவிட்டோம். ஏதோ அரசியல் அதிகாரி_அறிஞர்கள்_மேல் மட்டத்தில் இருப்பவர்களின் வேலை என்று இருந்து வருகிறோம். எதிர்ப்பது என்பது சாதாரண மக்களின் கடமையாகும் என்ற பண்பாட்டை உருவாக்கவில்லை. இவை எல்லாம் வல்லுநர்கள் வேலை என்பது என தீர்மானித்துவிட்டு வாய்மூடி கிடக்கிறோம்.

எனவே, நிதி கிடைப்பது என்ற பிரச்னையைவிட இதுதான் மிகப் பெரிய பிரச்சனை என எனக்குப்படுகிறது. இதற்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதையும் அறிவேன். வெறும் சொல் உபதேசத்தால் கொண்டு வர முடியாது. இது பொதுமக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டது, பொதுமக்களின் பணம் இது என்ற விவாதம் சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஆனால் பொது விவாதம் நடைபெறவில்லை.

தீராநதி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தொண்டு அமைப்பு அல்லது தன்னார்வக்குழு என்பது, வேலை கொடுக்கும் ஒரு நிறுவனம் என்பதுதான். சேவை என அர்த்தப்படாமல் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழி என்ற மனோபாவம் ஆழமாக வேர்விட்டு விட்டது. இந்த நிலைமையை எப்படிப் போக்குவது அல்லது மாற்றுவது என்பதுதான் பிரச்னை. தமிழ்நாட்டில் வேலையில்லா பிரச்னை மிகப் பெரிய பிரச்னை. படித்த வேலையில்லாதவர்கள் பெருமளவில் பெருகிக் கொண்டு வருகிறார்கள். வேலையில்லாதவர்கள் ஒன்று சேர்கிறார்கள். நாம் ஏன் ஒரு தன்னார்வக் குழு தொடங்கி, பணம் சம்பாதிக்கக் கூடாது என்று செயல்படுத்துகின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எப்படி? இதைப்பற்றி தங்கள் அனுபவம் என்ன?

அஜய்மேத்தா: நீங்கள் சொல்வது சரிதான் என்பேன். தன்னார்வ குழுக்கள், அரசின் நிதியுதவிகளை செலவழிக்கும் ‘விநியோக குழாய்களாக’ கீழிறக்கப்பட்டுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. இவை பெரும் மோசடிக் கும்பலாக, கமிஷன் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறித்தான் உள்ளன. எவ்வளவு பணம் தருகிறாய்? உனக்கு இவ்வளவு கொடுக்கப்படும் என்பதுதான் நடைமுறைச் செயலாக ஆகிவிட்டது. பணம் அல்லது நிதி எந்தத் திட்டத்திற்காக_ இந்த திட்டத்தினால் எவர் பயனடையப் போகிறார்கள் என்பதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை, இதில் அரசியல்வாதிகளும் புகுந்து விட்டார்கள். ஏழைமக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உதவிகளை, புத்திசாலியாக உள்ள மற்றவர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள். இதில் பெரும் துயரம் என்னவென்றால் கபளீகரம் செய்பவர்களும் வறிய நிலையிலேதான் இருக்கிறார்கள். ஆகவே சுயநலவாதிகளிடமிருந்து இந்த தர்மசிந்தனை தோற்காதபடி காப்பாற்றுவது என்பது மிகக் கடினமான காரியம். இதற்கு என்னதான் வழி இருக்கிறது? எனவே எடுத்துக்காட்டாக செயல்படும் தொண்டு அமைப்பை உருவாக்க வேண்டும், அதற்கான கொள்கைகளை, செய்முறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும். எனவே படித்த வேலை இல்லா இளைஞன் தொண்டு நிறுவனம் அமைப்பது என்பது தவறு இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவன் சமூக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என அவன் உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உன் நலத்தை கவனித்துக் கொள்ளும்போது, அதே சமயத்தில், சமுதாயத்தின் நலத்திற்கும் பாடுபட வேண்டும். அப்படித்தான் செய்ய வேண்டுமேயழிய, கண்டனம் செய்வது சரியல்ல என்றுதான் சொல்லுவேன். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லையென்றாலும் நான் பரிந்துரைப்பது இதுதான். செம்மையாக, நினைத்துவழிபட நெறியோடு செயல்படும் தொண்டு நிறுவனங்கள்; அனுபவமில்லாத முறைகேடாக நடக்கும் ஏனைய தன்னார்வ குழுக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் ‘நெறி தவறாமல் நடந்தால்; உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.

தீராநதி: தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு கழகம்; தமிழ்நாடு அரிசன நவக் கழகம், பெண்கள் மேம்பாட்டுக் கழகம், இவையெல்லாமே விளிம்புநிலை மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, ஏற்படுத்தப்பட்டவை. அரசாங்கம் உண்மையாகவே மேம்பட வேண்டும் என்று நிதிஉதவி தருகிறது. ஆனால் எவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு சேரவில்லை. போலித் தொண்டு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசு நிறுவனங்களை நடத்தும் அதிகாரிகளின் மேலும் குற்றம் சுமத்த முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலத்திற்குள் செலவழிக்க வேண்டும், செலவழிக்கவில்லை என்றால் விளக்கம் தரவேண்டும். ஏன் இந்த வம்பு என்று எல்லாம் எப்படியோ செலவழிக்கதானே வேண்டும் என இப்படி செயல்படுகிறார்கள். இம்மாதிரியான நிலைமை வடஇந்தியாவில் உண்டா?

அஜய்மேத்தா: வடஇந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைமையே. புதுதில்லியில் ‘சுப்பார்ட்’ என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. அது தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? ‘சுப்பார்ட்டில்’ பணிபுரிபவர்களும், வெளியாட்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு முறைகேடாக நடந்தனர், ஒதுக்கப்பட்ட நிதி எதற்காக, எவருக்காக என்பதை எல்லாம் தள்ளிவிட்டு செலவழித்தனர். என்ன நடக்கிறது என்பதை அடையாளங்காண வேண்டும். இது மிக முக்கியமான பிரச்னை. நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கமானது, ஒதுக்கீடு செய்வதோடு நின்றுவிடாமல், எப்படிச் செயல்முறைப் படுத்தப்படுகிறது, தலைமைதாங்கி நடத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவற்றின் அமைப்பு இவற்றைக் கண்காணிக்க வேண்டும்! இந்தக் கண்காணிப்பு கடினமானதுதான். ஆனால் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இது தொலைதூரப்பார்வை சம்பந்தமானது.

தீராநதி: மாநில அரசின் பொது நிறுவனங்கள் அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பாட்டிற்கான நிறுவனங்கள் செயல்பாடு இருக்கிறதே மிகவும் வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு முறைகேடாக நிதியுதவியை எடுத்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், கிட்டதட்ட முப்பத்தைந்து தன்னார்வ அமைப்புகளை உண்டாக்கி பணம் பெருவது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டப்படி பார்த்தால் அமைப்பு, நிர்வாகம், ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கின்றன. ஒன்றுமே சட்டப்படி நடவடிக்கை, எடுக்க முடியாது. மத்திய, மாநில பொது நிறுவனங்கள், தாம் செயல்படும் இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை தத்து எடுத்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், உதகமண்டலத்திலுள்ள ஃபிலிம் உற்பத்தி கழகம். இவை என்ன செய்கின்றன? இவற்றின் தொழிற்சாலைகளில் சுற்றுச் சூழல் மாசு அடைகின்றன. எனவே சட்டப்படியாக இந்த வகையான நிறுவனங்கள், தாம் ஈட்டும் வருவாயில் அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வுக்காக ஒரு பகுதியை செலவிடும்படி செய்யலாமே?

அஜய்மேத்தா: நீங்கள் சரியாகவே சொன்னீர்கள். உங்களைப் போன்றவர்கள் பொதுநலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்ல அறிகுறியாகும். மக்கள் பணம் வீணாக_ எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு அல்லாமல் செலவு செய்யப்படுகிறது; ஒருவிதமான கொள்ளைதான்_ ஐயமே இல்லை. இது அரசியல் நிர்ப்பந்தம். எதுவாக இருந்தாலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னை. இது சரிசெய்வதற்கான போராட்டம் மிக நீண்டகாலம் தேவைப்படும். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைகளில் எழுதலாம். அதாவது இம்மாதிரியான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை என்று மட்டுமே எழுதாமல்; இருக்கிற கட்டுப்பாட்டிற்குள் மாற்று செயல்பாடுகளும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டிச் சொல்லலாம். பொது நிறுவனங்கள் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. எம்மாதிரியான பள்ளிக்கூடங்கள் எம்மாதிரியான பாடத்திட்டங்கள் என்பனவற்றைப் பற்றி உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மிக முக்கியமானவற்றை செய்யத் தவறிவிட்டன. அதாவது உண்மையான தொண்டு பணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பத் தவறிவிட்டன என்று சொல்வேன். அதாவது தற்காலிகத் தீர்வைத்தான் மேற்கொள்கின்றனர். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது செய்யுங்கள். உடனடியாக தீர்வுகிடைக்கட்டும்’ இந்த தற்காலிக தீர்வு மனோபாவம் நல்லதல்ல. எதிலுமே ஒப்பிட்டு பார்க்கும் போது சிறந்த மாற்று இருக்கிறது என்பதை மக்களைப் பார்க்கும்படிச் செய்ய வேண்டும்.

தீராநதி: உங்களுக்கு அவசியமான தகவல் ஒன்றை கூறுகின்றேன். இங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்று தன்னார்வ குழு சான்றிதழ் படிப்பிற்காக அஞ்சல்வழி கல்வி தொடங்கியுள்ளது. அது என்ன வென்று விசாரித்ததில் பதில் கிடைத்தது’’ வேலை இல்லாத் திண்டாட்டத்தில் மாட்டித் தவிக்கும் இளைஞர்களுக்கு எப்படி தன்னார்வ அமைப்புகளை தொடங்கலாம், எப்படி நிதியுதவி பெறலாம்? என்று சொல்லிக்கொடுக்கிறதாம். இன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி செய்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் எவ்வளவு விழுக்காடு இந்த நிதியுதவி கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிதியுதவியில் இரண்டு விழுக்காடு கூட சமூகப்பணிக்காக செலவுசெய்யப்படவில்லை. இந்த நிலைமாற்ற என்ன செய்ய வேண்டும்?

அஜய்மேத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏதோ தான தர்மம் செய்கிறார்கள். மதக்காரியத்திற்குக் கொடுக்கிறார்கள் நல்லது. ஆனால் இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். நீங்கள் கொடுக்கிறீர்கள். செலவும் செய்யப்பட்டு விடுகிறது. அதைப்பற்றி எல்லாம் தவறு சொல்லவில்லை. இதோ பாருங்கள் இந்த நிறுவனம் ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது; இதன் நீண்டகால பணியினால் பயன் அடைந்தவர்கள் உள்ளனர்; சமுதாயத்தின் மாற்றங்கள் இவற்றினால் நிகழ்ந்துள்ளன. நீங்கள் செய்யும் தர்மங்கள் தானங்கள் நினைத்த பயன்களை அடைய வேண்டாமா? என்று சொல்ல வேண்டும். இப்படி சொல்ல வேண்டும் என்ற சிந்தனையே இன்னும் எழவில்லை. முயற்சி எடுக்கப்பட வேண்டும். அவர்களை செயல்பட தூண்டிவிட வேண்டும். தொண்டு நிறுவனங்களுமே தம் செயல்பாடுகளைப்பற்றி ‘ஆத்ம சோதனை’ செய்ய வேண்டும். மகாத்மா காந்தி இதனைத்தான் செய்தார். இப்படிச் செய்ய ஐந்தோ பத்தோ ஆண்டுகள் ஆகலாம். எனவே பொது நலத்தில் அக்கறையுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம். நம் நாடு சனநாயக நாடு என்பதினால் மாற்று வழிகள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மக்களிடம் அறிவுவளர்ச்சியை எழுப்பமுடியும்தான் என்பது என் அனுபவம்.

தீராநதி: ‘கொடுப்பவர்’ தான தருமம் செய்ய எண்ணாமல் சமூக மாற்றத்தைத் தூண்டிவிட எண்ண வேண்டும் இல்லையா? சமூக வளர்ச்சிக்கான முதலீடு செய்பவர் என்று தன்னை எண்ணிக்கொள்ள வேண்டாமா?

அஜய்மேத்தா: உங்கள் கருத்தை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். சமூக மாற்றத்தை ஏதோ தொழில்நுட்ப சம்பந்தமான தீர்வு என எண்ணிவருகிறார்கள். இந்தச் சிந்தனை பல பிரச்னையை உண்டாக்குகிறது. இவர்களுடன் உங்களைப் போன்றவர்கள் பேச வேண்டும். நாம் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதோ ஒரு சில புத்திசாலிப் பேர்களால் பிரச்னைக்கு தீர்வுகாணமுடியும் என்பது இயலாது. சமூக மாற்றம் என்பது நிர்வாகத்திறமையைச் சார்ந்தது அல்ல. சாதாரண மக்களும் பங்களிக்கும் திறமையுள்ளவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் தேவைப்படுவது உரையாடல். என்னிடம் பணம் இருக்கிறது; உன்னிடம் இல்லை என்ற பேச்சு தீர்வு காணாது. சரி என்னிடம் பணம் இருக்கிறது; நிர்வாகத்திறமை இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது’ ‘என்னிடம் அனுபவ சக்தி இருக்கிறது.’ ஆக இவையெல்லாம் ஒன்று திரட்டப்பட வேண்டும் ஆக நம் சமூகத்திற்குப் பொதுவான தொலைநோக்கினை. உருவாக்க வேண்டும். ‘நான் ‘சேவாமந்திர் என்ற தொண்டுநிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். நான் அதைவிட்ட பின்பு, அது மேலும் மேன்மையடைந்தது. (சிரிப்பு) உங்களை அங்கு வரவழைக்க விரும்புகிறேன். அந்தக் கிராமங்களில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்களை நடத்துவது இப்படி. ஆனால் இவை நிகழ ஆண்டுகள் பலவாயின. சாதி உணர்ச்சி மறைய எடுத்துக்கொண்ட முயற்கிள் எல்லாமே நிறைவாக_ செம்மையாக ஆகிவிட்டன எனச் சொல்லமாட்டேன்.

தீராநதி: பொதுமக்கள் பணத்தைச் செலவழிக்கும் தன்னார்ந்த அமைப்புகள் முறைகேடாக நடந்து கொள்ளும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? அதாவது அவை மேல் பொதுநல வழக்குகள் தொடர முடியுமா? ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டவை என்பதால்?

அஜய்மேத்தா: ஏன் எடுக்க முடியாது? அவை அரசாங்கத்திடமிருந்து நிதி பெறுமானால், நிச்சயம் அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது நீண்டகால வேலை என்பது இல்லையா? சான்றுகள் திரட்ட வேண்டும், வழக்குத் தொடர்பவருக்கு உறுதியாக இல்லாதபடிக்கு நிலைமை உருவாக்கப்படலாம். நீதிமன்றத்திற்குப் போவதைவிட வேறு பொது மன்றம் வாயிலாக முறைகேடாக செயல்படும் தன்னார்வ அமைப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட சீரழிவு அல்ல; அறிவு சம்பந்தமான சீரழிவும் ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறேன். சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில், எங்கள் மாநிலத்தில் சொல்லப்பட்டது என்னவென்றால், இந்தப் பழங்குடிமக்கள் தாங்கள் வாழும் வனங்களை முறையாக பராமரிக்கத் தெரியாதவர்கள். ஆக, அவற்றை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் தேவைப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது அரசும் அப்படியே செய்தது. ‘‘இப்போது இருபதாண்டுகள் கழித்து அப்படி செய்வது முட்டாள்தனம். ஏனென்றால், வனங்கள் தனியார்களிடம் வசப்பட்டுவிட்டன. அவர்களும் சமூக உணர்வையும் இழந்து விட்டார்கள். ஆக இதை இருபத்தோராம் நூற்றாண்டில் அப்போது பேசியதுபோல பேசினால் அதுதான், அறிவு சம்பந்தமான சீரழிவு ஆகும். மேலும் கருத்தை உருவாக்குபவர்களும் நகரம் சார்ந்தவர்கள், எதார்த்த நிலைமை என்ன என்பதை அறியாதவர்கள் அவர்கள். தம் சுய முன்னேற்றத்திற்காக இவ்வமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக உண்மையான தொண்டு செய்பவர்களுக்கும் விளம்பரத்திற்காக உள்ளவர்களுக்கும் உள்ள வேற்றுமையை மக்களுக்குப் புலப்படுத்த புதிய சிந்தனைகளை உருவாவதற்கு வெளியை ஏற்படுத்த வேண்டும். நான் பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை நான் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனச் சொன்னேன். இதனால் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும், கொடுப்பவர்கள் நிதி அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள் என்றார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு முறைகேடு நடந்து விட்டது; அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம் என இரண்டுமே தெரியப்படுத்த வேண்டுமென சொன்னேன். இது அறம்சார்ந்த கடமையெனவும் வற்புறுத்தி, சம்மதிக்கவும் வைத்தேன்.

சந்திப்பு: கி.அ.சச்சிதானந்தன் _ கடற்கரய்

Posted in Ajay Mehta, Ajay Mehtha, Bribery, Contributions, Corruption, Divide, Donations, Donor, Finances, God, Govt, Interview, Kadarkarai, kickbacks, Money, Needy, NGO, Poor, Religion, Rich, Sachidhanandhan, Sachidhananthan, Sachithanandhan, Sachithananthan, service, Seva Mandhir, Seva Manthir, Society, Theeranathi, Volunteer, Wealthy, Welfare | 1 Comment »